Skip to main content

அடிமனம் | மனக்கோளாறு | பெ. தூரன்


சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையிலே ஒரு திடுக்கிடும்படியான செய்தி வெளியாயிற்று, உலகத்திலே பயித்தியம் அதிகமாகிக்கொண்டு வருகிறதாம். சாதாரண மனிதன் ஒருவன் இப்படிக் கூறியிருந்தால் அதைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் அவனையே ஒரு பயித்தியம் என்று கூறிவிட்டுச் சும்மா இருந்துவிடலாம். ஆனால் இந்தச் செய்தியைக் கூறியவன் அப்படிப்பட்ட சாதாரண ஆள் அல்ல. உண்மையில் அதைத் தனிமனிதன் யாரும் கூறவில்லை. மனித உள்ளத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக பிரான்ஸ் நாட்டிலே ஏற்பட்டுள்ள சிறந்த கழகம் அப்படிப்பட்ட கருத்தை அண்மையிலே தனது அறிக்கையிலே கூறியிருக்கிறது. அதைத்தான் பத்திரிகைக்காரர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்தக் கழகத்தின் அறிக்கை கூறுவதாவது: “அமெரிக்கர்களிலே இருநூறு பேருக்கு ஒருவரும், பிரெஞ்சுக்காரர்களிலே முன்னுாறு பேருக்கு ஒருவரும், எகிப்தியர்களிலே ஆயிரத்திற்கு ஒருவரும் மனக்கோளாறு உடையவர்களாக இருக்கிருர்கள்”
இவ்வாறு மனக்கோளாறு உண்டாவதற்கான காரணங்களிலே பட்டண வாழ்க்கையின் இரைச்சலையும் பரபரப்பையும் முக்கியமாகச் சேர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கருதுகிறது.
நல்ல வேளை. கிராமங்களே நிறைந்த நமது நாட்டிலே மனக்கோளாறு உடையவர்கள் இத்தனை பேர் இருக்கமாட்டார்கள் என்று நாம் திருப்தியடையலாம். ஆனால் அப்படித் திருப்தியடைந்து இதைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பது சரியல்லவென்று எனக்குத் தோன்றுகிறது.
மனக்கோளாறு என்றால் முழுப் பயித்தியம் என்று நாம் கருதக்கூடாது. சாதாரணமாக மனிதனுடைய மனம் இருக்கவேண்டிய நிலையிலிருந்து மாறிப் பிறழ்வாக இருப்பதையெல்லாம் இதில் சேர்த்துக் கொள்ளலாம். சற்றுக் கோணலாக வேலை செய்யும் மனநிலையிலிருந்து முற்றிலும் பிறழ்வடைந்து முழுப்பயித்தியமாக இருக்கும் நிலை வரையில் எல்லா நிலைகளும் மனக்கோளாறு என்பதில் அடங்கும்.
நமது நாட்டிலும் இன்று பட்டணங்களும், பட்டணங்களின் மக்கள் தொகையும் பெருகிக்கொண்டுதானிருக்கின்றன. இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு பார்த்தால் நம் நாட்டுப் பட்டணங்களெல்லாம் மிகப் பெரியவையாகி விட்டன; பட்டணங்களிலே குடியிருக்க வீடு கிடைப்பது அரிதாகிவிட்டது. மேலும் சுதந்திர இந்தியாவில் கைத்தொழில்கள் பெருகப் பெருகப் பட்டணங்களும் பெருகத் தொடங்குகின்றன. இன்று நாமும் பட்டண வாழ்க்கையின் அதுகூலங்களோடு அதனால் ஏற்படும் தீமைகளையும் அநுபவித்து வருகிறோம். நமது வாழ்க்கையிலும் அமைதி குறைந்து வருகிறது. பரபரப்பும், இரைச்சலும், அர்த்தமற்ற வேகமும் எல்லா நாட்டிற்கும் பொதுவான அம்சங்களாக மாறி வருகின்றன. அதனால் எங்கும் இன்று மனக்கோளாறுகள் அதிகரித்து வரும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
மனத்திற்கும், மூளைக்கும், நரம்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் அதிர்ச்சியைத் தரக்கூடிய எத்தனையோ காரியங்கள் இக்கால நாகரிக வாழ்க்கையில் நிகழ்கின்றன. வாழ்க்கையில் அமைதி குறைந்து வருகின்றது. உடல் உழைப்பைக் குறைப்பதற்கான யந்திரங்களும், தூரத்தை வெல்லக்கூடிய போக்குவரத்துச் சாதனங்களும் மனிதனுக்கு அதிகம் ஓய்வைக்கொடுத்து அமைதியைப் பெருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் நடைமுறையிலே அப்படியொன்றும் நிகழவில்லை. நவீன யந்திரங்களையும் சாதனங்களையும் அதிகமாகப் பயன்படுத்துபவர்களே மிகுந்த பரபரப்புடையவர்களாயும் அமைதி குறைந்தவர்களாயும் இருக்கிறார்கள்.
பாபரப்பு மிகுந்த நவீன வாழ்க்கையோடு குடி முதலிய பழக்கங்களும் மன அதிர்ச்சியை விளைவிக்கிறது. காப்பி முதலிய பானங்களும் நரம்புகளுக்குக் கிளர்ச்சியைக் கொடுக்கின்றன; ஆனால் மதுபானம் செய்கின்ற தீமையே மிகுதி.
தீராத கவலை, சோர்வு, மனப் போராட்டம் முதலியவைகளும் மனக்கோளாறுகளுக்குக் காரணமாகின்றன.
மனம் மிக நுட்பமானது. அதிலே எப்படி எப்படியோ காரியங்கள் நிகழ்கின்றன; சிக்கல்களும், குமுறல்களும் ஏற்படுகின்றன. அதை ஆழ்ந்து கவனிக்கக் கவனிக்க அதிசயமான பல உண்மைகள் வெளியாகின்றன.
இரண்டாம் உலக யுத்த சமயத்திலே ஏற்பட்ட ஒரு சம்பவம் எனக்கு இந்த சமயத்திலே நினைவிற்கு வருகிறது. நான் அப்பொழுது கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள இராமகிருஷ்ண வித்யாலயம் என்ற சிறந்த குருகுலத்திலே சேவை செய்துகொண்டிருந்தேன். ஒரு நாள் மாலை மூன்று மணியிருக்கும். ஒர் இளைஞர் இடுப்பிலே ஒரு கெளபீனத்தோடு மட்டும் வேகமாக ஓடிவந்து வித்யாலயக் கோயிலுக்குள்ளே புகுந்துகொண்டார். அவரை வெளியே வரச்செய்வது பெரும்பாடாகப் போய்விட்டது. “ஹிட்லர் எலக்டிரானிக் அலைகளைப் பிரயோகம் செய்து விட்டான். உலகமே அழியப்போகிறது. அதைத் தடுக்க வேண்டுமானல் இராமகிருஷ்ணரால்தான் முடியும்” என்று அவர் பயந்த குரலில் கத்தத் தொடங்கிவிட்டார்.
அந்த இளைஞரை எனக்கு முன்பே தெரியும். நாட்டுப் பணியிலே நல்ல ஆர்வமுடையவர் அவர். வயது சுமார் இருபத்தைந்து இருக்கும். எப்படியோ அவர் உள்ளம் திடீரென்று பேதலித்து விட்டது. சொக்காயையும் இடுப்பு வேட்டியையும் களைந்தெறிந்துவிட்டுக் கையிலிருந்த கதர்ப்பையைக் கிழித்துக் கெளபீனமாகக் கட்டிக்கொண்டு காடு காடாகச் சுமார் ஐந்து ஆறு மைல் ஓடிவந்திருக்கிறார். அன்புருவமாக விளங்கும் இராமகிருஷ்ணரிடத்திலே மட்டும் எப்படியோ நம்பிக்கை அந்தப் பேதலித்த நிலையிலும் இருந்திருக்கிறது. யுத்தத்தைப் பற்றிய செய்திகளும் ஜெர்மானியர் புதிது புதிதாகப் பயன்படுத்திய அழிவுப் படைகளும், அவர்கள் தொடக்கத்தில் அடைந்துவந்த வெற்றிகளும் சேர்ந்து பத்திரிகைகளின் வாயிலாக அவர் உள்ளத்திலே புகுந்து அதை நிலை தடுமாறச் செய்துவிட்டன.
முன்பெல்லாம் பயித்தியத்தைப் பற்றிப் பல வேறு கருத்துக்கள் உலகத்திலே நிலவி வந்தன. பயித்தியத்திற்குச் சிகிச்சைகளும் பல வகையாக இருந்தன. பல சமயங்களிலே மனக்கோளாறுடையவர்கள் கொடுமையாக நடத்தப்பட்டார்கள். அடித்தல், விலங்கிடல், தனியறையிலே அடைத்து வைத்தல் போன்ற பல முறைகள் கையாளப்பட்டன.
ஆனால் பயித்தியத்தைக் குணப்படுத்துவது பற்றிய சிகிச்சை முறைகள் இன்று மாறிவருகின்றன. அதற்கு முக்கிய காரணம் மனத்தைப்பற்றிய பல உண்மைகள் இன்று புதிதாகத் தெரிந்திருப்பதேயாகும். மனத்தின் நுட்பமான தன்மையை அறிய அறியச் சிகிச்சை முறைகளும் மாறிவருகின்றன.
மனம் எவ்வளவு நுட்பமானது என்பதற்கும், அதிலே கோளாறுகள் எப்படியெல்லாம் விந்தையான முறையில் உண்டாகின்றன என்பதற்கும் இன்னுமோர் உதாரணம் தருகிறேன்.
காட்டு வாத்து என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதைத் தாரா என்றும் கருடன் தாரா என்றும் சில பிரதேசங்களிலே கூறுவார்கள். சாதாரண வாத்துக்குப் பறக்கும் சக்கி மிக மிகக் குறைவு. ஆனால் காட்டு வாத்து வெகுவேகமாகப் பறக்கக்கூடியது. அவை கூட்டங்கூட்டமாக வாழும். பெரிய பெரிய நீர்நிலைகளைத் தேடி வானத்தில் எழுந்து பறந்து செல்லும்.
இந்தக் காட்டு வாத்துக்களை வேட்டையாடுவதிலே ஒருவனுக்கு அலாதியாக ஓர் ஆர்வமிருந்தது. அவனுடைய ஆர்வத்தை ஒரு வெறி என்றுகூடச் சொல்லிவிடலாம். துப்பாக்கியாலே சுட்டு ஒரு காட்டு வாத்தை வீழ்த்திவிட்டால் அவன் அதை ஒரு பெரிய சாதனை என்று பெருமைப்படுவான். அந்தப் பறவைகளைச் சுட்டு வீழ்த்த வீழ்த்த அவனுடைய களிப்பு எல்லை கடந்துவிடும். காட்டு வாத்தைச் சுடுவதிலே உனக்கேன் இத்தனை பயித்தியம்? என்று கேட்டால், அதன் மார்புப் பகுதி உண்ணுவதற்கு மிக நன்றாக இருக்கிறது; எனக்கு அதிலே நிரம்பப் பிரியம் என்று உடனே பதில் கூறுவான்.
மேற்போக்காகப் பார்க்கிறபோது அவன் கூறும் பதில் திருப்தியளிக்கக் கூடியதாகத் தோன்றலாம். ஆனால் அவன் காட்டு வாத்துக்களைச் சுடுவதில் காட்டும் வரம்பு கடந்த வெறியைக் கவனித்தபோது சிலருக்கு அதிலே சந்தேகமுண்டாயிற்று. அவன் மன நிலைமையை ஆராய்ந்து பார்க்க விரும்பினார்கள். மனப்பகுப்பியல் முறையால் அவனுடைய மனத்தைப் பரிசோகித்த போது ஓர் உண்மை வெளியாயிற்று. சிறு குழந்தையாக இருந்தபோது தாயின் மார்பகத்திலே பாலருந்தி அவன் பெற்ற இன்பத்தை அந்தக் காட்டு வாத்தின் மார்புப் பகுதி ஓரளவு கொடுப்பதாக இருந்தது. அவனுடைய தாய் அசைந்தசைந்து நடப்பது அவனுக்கு எப்படியோ வாத்தின் நினைப்பை அவனுக்குச் சிறுவயதிலேயே உண்டாக்கியிருக்கிறது. அன்ன நடை என்று கவிகள் பெண்களின் நடையை அழகாக வருணிக்கிறார்கள். அவனுக்கு அவனுடைய தாயின் நடை வாத்து நடையாகத் தோன்றியிருக்கிறது. ஆகவே குழந்தைப் பருவத்திலே தாயிடம் பாலருந்திப் பெற்ற திருப்தியையும் இன்பத்தையும் அவை கிடைக்காதபோது அவற்றிற்காக ஏங்கிய அவன் உள்ளம் காட்டு வாத்தைச் சுட்டுத்தின் பதிலே பெற்றிருக்கிறது. குழந்தைப் பருவத்திலே தாய்ப்பால் அருந்துவதில் தடையேற்பட்ட காலத்திலே உண்டான ஏக்கம் மனத்திலே எங்கேயோ அத்தனை ஆண்டுகளாக மறைந்து கிடந்திருக்கிறது. அது பின்னால் காட்டு வாத்தை வேட்டையாடித் தின்னும் ஒரு பெரு விருப்பமாக மாறி வெளிப்பட்டிருக்கிறது.
மனப்பகுப்பு ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மை வெளியான பிறகு அவனுக்குக் காட்டு வாத்து வேட்டையிலேயிருந்த வெறி முற்றிலும் மறைந்துவிட்டது. மனப்பகுப்பு ஆராய்ச்சி எப்படி நடக்கிறதென்பதைப் பிறகு பார்ப்போம்.
மனத்திலே எப்படியெல்லாம் ஏக்கங்களும் ஏமாற்றங்களும், துன்பங்களும், தோல்விகளும், அதிர்ச்சிகளும், ஆசைகளும் அழுந்திக் கிடக்கின்றன என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். திருப்தி பெறாமல் அழுந்திக் கிடக்கும் இவ்வகையான உணர்ச்சிகளினாலே மனத்திலே பல விதமான சிக்கல்களும், கோணல்களும் உண்டாகின்றன. அவற்றை நாம் உணர்ந்து கொண்டால் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும். நம் வீட்டிலே குழந்தைகளை நன்கு வளர்க்கவும் இயலும். மற்றவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவும் முடியும்.

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர