Skip to main content

காந்தி யார்? - 4 | வெ. சாமிநாத சர்மா



சாத்வீக எதிர்ப்பு அல்லது ஒத்துழையாமையென்பது, காந்தியடிகளால் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டதுமல்ல; இந்தியாவின் சரித்திரத்திற்குப் புறம்பானதுமல்ல; புதிதுமல்ல. "தீங்கிழைத்தவருடைய வாசற்படியில் உட்கார்ந்து, அந்தத் தீங்குக்குப் பரிகாரம் தேடிக்கொடாவிட்டால் இறந்துபோவதென்று நிச்சயப்படுத்திக்கொள்வது, மரணம் வரையில் பட்டினி கிடப்பது, சட்டங்களை மறுப்பது, தேசத்தினின்று வெளியேறுவது, அரசனைத் திரஸ்காரஞ் செய்வது, அரசனைப் பகிரங்கமாகக் கண்டிப்பது முதலியவைகளெல்லாம் அஹிம்ஸா தர்ம முறையில் அனுஷ்டிக்கப்படக்கூடிய ஆயுதங்களென்று நம் புராதன நூல்களில் கூறப்படுகின்றன" என்ற பாபு பகவான் தாஸின் வாசகம் இங்கு கவனிக்கத்தக்கது.

ஜடப் பொருளின் ஆராய்ச்சியில் அதிகமான நம்பிக்கை வைத்து, அதிலேயே வாழ்க்கை பூரணத்துவம் பெறுகிறதென்று முடிவு கட்டுகிற மேனாட்டார்கூட இந்தச் சாத்வீக எதிர்ப்பு முறையைக் கையாண்டிருக்கிறார்கள். சென்ற சில நூற்றாண்டுகளில் மேனாட்டிலும் இந்தியாவிலும் எந்தெந்தச் சந்தர்ப்பங்களில் இந்தச் சாத்வீக எதிர்ப்பு முறை அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறதென்பதைச் சுருக்கமாக எடுத்துக்காட்டுகிறோம்.

1. ஆஸ்திரிய ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த ஹங்கேரியின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவன் கோஸ்ஸத் என்ற அறிஞன் என்றுதான் எல்லோருக்கும் சர்வ சாதாரணமாகத் தெரியும். ஆனால், இவனால் ஹங்கேரிக்கு விடுதலை வாங்கிக்கொடுக்கப்படவில்லை. உண்மையில் சுதந்திரத்தை வாங்கிக்கொடுத்தவன் பிரெங்க்ஸ் டீக் (Ferencz. Deals) என்பவன். இவன் ஆஸ்திரிய ஏகாதிபத்தியத்திற்கு விரோதமாகச் சாத்வீக முறையில் ஒத்துழையா இயக்கத்தை நடத்தி 1867-ஆம் வருஷம் வெற்றி பெற்றான். இவனால்தான், ஹங்கேரியின் தனி அரசியல் அமைப்பு அங்கீகரிக்கப்பட்டது.

2. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் காலத்தில் ஜெர்மனியில், பிஸ்மார்க் கொண்டுவந்த சில திட்டங்களை எதிர்த்து, முக்கியமாக இரண்டு ஒத்துழையா இயக்கங்கள் நடைபெற்றன. ஓர் இயக்கம், கத்தோலிக்க கிறிஸ்துவர்களால் நடத்தப் பெற்றது. மற்றொன்று தொழிலாளர்களால் நடத்தப் பெற்றது. இவை இரண்டும் வெற்றிபெற்றன.

3, ருஷ்ய ஆதிக்கத்தின் கீழிருந்த பின்லாந்து வாசிகள், தங்களுடைய துன்பங்கள் சிலவற்றிற்குப் பரிகாரம் தேடிக்கொள்ளும் பொருட்டு 1901-ஆம் வருஷத்திலிருந்து 1905-ஆம் வருஷம் வரை சாத்வீக ஒத்துழையா இயக்கத்தை நடத்தி வெற்றி பெற்றார்கள்.

4. இந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பாகத்தில், புகையிலை உரிமையை எதிர்த்து பர்ஷியர்களும், பிரிட்டிஷ் ஆதிபத்தியத்தை எதிர்த்து எகிப்தியர்களும், அந்நியர்களுடைய பொருளாதார ஆதிக்கத்தை எதிர்த்துச் சீனர்களும் சாத்வீக முறையில் போராடியது அனைவருக்கும் நினைவிருக்குமல்லவா?

5. 1812-ஆம் வருஷம், பாரத நாட்டின் புண்ணிய க்ஷேத்திரமாகிய காசியில், அரசாங்கத்தார் சில புதிய வரிகளை விதித்தனர். இதனை ஜனங்கள் சாத்வீக முறையில் எதிர்த்தார்கள். எல்லாக் கடைகளும் மூடப்பட்டன. ஜனங்கள் எவ்வித வேலையிலும் ஈடுபடவில்லை. தலைவர்கள் சொற்படி ஜனங்கள் நடந்தனர். இயக்கம் வெற்றிபெற்றது. அரசாங்கத்தார் வரியை ரத்து செய்தனர்.

6. 1830-ஆம் வருஷம் மைசூர் சமஸ்தானத்தில் சில அட்டூழியங்கள் நடைபெற்றன. இவைகளை அஹிம்சா முறையில் எதிர்த்து ஜனங்கள் போராடினார்கள். 'ஜனங்கள் கிராமங்களை விட்டு வெளியேறிவிட்டார்கள். நிலங்களில் யாரும் வேலை செய்யவில்லை. வரி செலுத்த மறுத்துவிட்டார்கள்.' கடைசியில் அரசாங்கம் பணிந்தது.

7. வங்காளப் பிரிவினையை எதிர்த்து 1907ஆம் வருஷம் இந்தியாவெங்கணும் சாத்வீக முறை யில் நடைபெற்ற இயக்கத்தை யாருமே அறிவர்.

இங்ஙனம் சாத்வீக எதிர்ப்பு இயக்கங்கள், பல நாடுகளில் பல காலங்களில் பலவாக நடைபெற்றிருக்கின்றன. ஆதலின், காந்தியடிகள்தான் இந்த இயக்கத்தின் சிருஷ்டி கர்த்தர் என்று சொல்ல முடியாது. ஆனால், இந்த இயக்கத்தைப் பொறுத்தமட்டில் காந்தியடிகளின் முக்கியத்துவம் எதிலிருக்கிறதென்றால், விஸ்தீரணமான ஒரு தேசம் பூராவுக்குமாக இந்த இயக்கத்தைப் பிரயோகம் செய்து பரீட்சை பார்த்ததில்தான். குறிப்பிட்ட ஒரு பிரிவார், குறிப்பிட்ட ஒரு குறைக்குப் பரிகாரம் தேடிக்கொள்ளும் பொருட்டு இந்த முறை இதுகாறும் எங்கும் கையாளப்பட்டதே தவிர, தேசப் பொதுவில் இதனை யாரும் கையாளவில்லை. இதில் காந்தியடிகள்தான் முதன்மையானவர். அவர், இந்தப் பரீட்சையில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார், இதனால் அந்நிய ஆதிக்கத்தின் பிடிப்பு எவ்வளவு தூரம் தளர்ந்திருக்கிறது, ஆயுத பலத்தையும், மனோ பலத்தையும், ஜாதீய உணர்ச்சியையும் இழந்து அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு ஜாதியாரை அஹிம்சைப் பரீட்சைக்குட்படுத்துவது சரியா, ஆத்மீக சோதனையை அரசியல் களத்திலே கொண்டுவந்து நடத்தலாமா என்பன போன்ற பிரச்னைகளில் கருத்து வேற்றுமைகளிருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால், வெற்றியோ தோல்வியோ, பலனோ, நிஷ்பலனோ, ஒன்றையுமே பொருட்படுத்தாமல் இந்தப் பரிசோதனையில் இறங்கிய துணிச்சல் இருக்கிறதே அது யாருக்கும் உண்டாகாது; இதுவரை யாருக்கும் உண்டாகவுமில்லை. இஃது அசாதாரணமான துணிச்சல் மட்டுமல்ல; அமானுஷ்யத் தன்மையுள்ள துணிச்சலுங்கூட. கடமையைச் செய்யவேண்டுமென்ற ஆவலினால் ஏற்பட்ட துணிச்சல் இது. இந்தத் துணிச்சலின் மற்றொரு பக்கந்தான் மகான் தன்மை. இந்தத் துணிச்சலுக்கும் மகான் தன்மைக்கும்தான் காந்தியடிகள் போற்றப்படுகிறாரே தவிர, அவர் அடைந்த வெற்றி தோல்விகளுக்காகவல்ல.

சாத்வீக எதிர்ப்பு, ஒத்துழையாமை என்று பல பெயரிட்டு அழைக்கப்படுகிற இந்த அஹிம்ஸை இயக்கம், லட்சியத்தை அடைவதற்கான ஒரு சாதனமே தவிர, இதுவே லட்சியமல்ல. ‘ஒழுங்கும் தன்னலத் தியாகமுமில்லாமல் எந்த ஒரு ஜாதியும் உண்மையான முன்னேற்றத்தையடைய முடியாதாதலால் இந்த ஒழுங்கும் தன்னலத் தியாக உணர்ச்சியும் இந்திய தேச மக்களிடையே ஏற்படவேண்டும்மென்பதற்காகவே ஒத்துழையா இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறதென்று’ 1920-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் லாலா லஜபதிராயின் தலைமையில் கூடிய விசேஷ காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட ஒத்துழையாத் தீர்மானம் கூறுவதை இங்கு நேயர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். பாரத ஜாதியானது எல்லா வகையிலும் சுபிட்சமாயிருக்க வேண்டுமென்ற உன்னத லட்சியத்தை அடைவதற்கு இந்த ஒத்துழையா இயக்கம் சரியான சாதனமாவென்பதைப் பற்றி, மேலே நாம் கூறியவாறு அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஆனால் இந்தச் சாதனத்தைக் கையாண்டதினால் இந்தியத் தேசிய வாழ்வைப் பொறுத்தமட்டில் சில நன்மைகள் உண்டாயிருக்கின்றனவென்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நன்மைகள் காலவேகத்தை யொட்டியனவா யில்லாமலிருக்கலாம்; நாம் அடைய வேண்டிய லட்சியத்தை உத்தேசிக்கையில், மிகச் சொற்பமாயிருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால், நன்மைகள் உண்டாயிருக்கின்றனவென்பதை நாம் ஒப்புக்கொள்ளவே வேண்டும். அவை யாவை?

1. ஒத்துழையா இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து, அதாவது காந்தியடிகள் காங்கிரசின் மேலாதிக்கம் பெற்ற காலத்திலிருந்து, அரசியலில் எல்லா ஜனங்களுக்கும் ஒரு சிரத்தை ஏற்பட்டிருக்கிறது. ஆங்கில மறிந்தார்க்கு மட்டும் அடைக்கலம் அளித்துவந்த இந்த அரசியலில் 'நமக்கும் உரிமையுண்டு, இதனையறிவது நமது கடமை'யென்று, பாமர ஜனங்களென அர்த்தமில்லாமல் அழைக்கப்படுகிற சாதாரண ஜனங்கள் கருதலானார்கள்.

2. இப்படி இவர்கள் சிரத்தை எடுத்துக் கொண்டதனால் ஏற்பட்ட பகிரங்கமான பலன் என்னவென்றால், பொதுக்கூட்டங்களில் ஆங்கில பாஷையில் பேசி, ஜனங்களின் கரகோஷத்தையும் அதிகாரிகளின் கைகுலுக்குதலையும் பெறுவதுதான் சிலாக்கியமென்றிருந்த போலி கெளரவம் போய்விட்டது. அவரவர்களுடைய தாய்மொழியில் பேசுவது நல்லதென்றும், தாய்மொழியின் மூலமாகவே ஒரு தேசத்தின் தன்மதிப்பு வளருமென்றும், ஆங்கில மறிந்த அரசியல்வாதிகள் எண்ணி அதனை அநுஷ்டானத்திற்குக் கொண்டுவந்தார்கள். பொதுவாக தேச பாஷைகளுக்கு ஒரு கெளரவம் ஏற்பட்டது.

3. இந்தியாவிலேயுள்ளவரனைவரும் ஒரே ஜாதியினர் என்ற உணர்ச்சி லேசாக ரேகை விட ஆரம்பித்தது.

4. ஆடம்பர வாழ்விலிருந்த மோகம் போய் எளிய வாழ்வு என்று சொல்லப்படுகிற இயற்கை வாழ்விலே ஒரு பற்றுதல் உண்டாயிற்று.

5. அன்றாட வாழ்க்கையின் தேவைகளை அந்நியப் பொருள்களைக்கொண்டு பூர்த்தி செய்வதென்ற பழக்கம் குறைந்தது. சுய தேசத்தில் உண்டாகிற பொருள்களை உபயோகிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. இதனால் சுதேசத் தொழில் முயற்சிகள் பல தொடங்கப்பட்டன.

6. தமக்கென்று ஒரு நாகரிக பரம்பரை உண்டு என்பதை, அடிமைத்தனத்தின் காரணமாக அடியோடு மறந்திருந்த இந்தியர்கள், அப்பொழுதிருந்து அந்தப் பரம்பரையைப் பற்றிச் சிறிது சிந்திக்கத் தலைப்பட்டார்கள்.

7. ஆளப்படும் நாட்டைப்பற்றி அதுகாறும் அசட்டை மனப்பான்மை கொண்டிருந்த ஆளும் சாதியினர், இப்பொழுது அதன் அரசியல் துடிப்புகளை அறிந்துகொள்ள ஆவல்கொண்டார்கள்.

8. இந்திய மகாஜனங்களிடத்தில் குடிகொண்டிருந்த அச்சம் விலகத்தலைப்பட்டது. அதன் ஸ்தானத்தில் அஞ்சாமை குடிகொள்ள ஆரம்பித்தது.

இவற்றில் சிரேஷ்டமானவை இரண்டு. ஒன்று பாரத ஜாதிக்கு அதன் நாகரிக பரம்பரையை உணர்த்தியது; மற்றொன்று, இந்திய மகா ஜனங்களுக்கு அளித்த அஞ்சாமையென்னும் ஆயுதம். காந்தியடிகளின் மகத்தான இந்த இரண்டு நன்கொடைகளுக்காகவுமே அவரை நாம் என்றும் நன்றியுடன் போற்ற வேண்டும்.

எப்படி அன்பும் துன்பமும் இணைபிரியாச் சகோதரர்களோ அதைப்போல் அடிமைததனமும் கோழைத்தனமும் இணைபிரியாச் சகோதரர்கள். எதனால் எது ஏற்பட்டது, அதாவது அடிமைத்தனத்தினால் கோழைத்தனம் ஏற்பட்டதா, அல்லது கோழைத்தனத்தினால் அடிமைத்தனம் ஏற்பட்டதாவென்பதை நாம் பாகுபடுத்திக் கூறமுடியாது, ஒன்றொழிந்தால் மற்றொன்றொழியும்; ஒன்றிருந்தால் மற்றொன்றிருக்கும். அவ்வளவுதான் நமக்குத் தெரியும். இவ்விரண்டும் ஒரு ஜாதியை, பனிபோல் மூடிக்கொண்டுவிட்டால், அந்த ஜாதி இருக்கிற இடமே தெரிவதில்லை. அஃது இருந்தும் இல்லாமலேயே இருக்கிறது. இதனாலேயே நமது பெரியோர்கள் அஞ்சாமையைப். பற்றி அதிகமாக வற்புறுத்திப் பேசியிருக்கிறார்கள்.

அஞ்சாமை யல்லாத் துணை வேண்டா வெஞ்சாமை
யெண்ணி இடத்தாற் செயின்

என்ற வள்ளுவர் வாக்கு முதல் “அச்சமில்லை; அச்சமில்லை”யென்ற பாரதியாரின் வாசகம் வரையில், எந்த மகா புருஷர்களுடைய திருவாக்குகளைப் பரிசீலனை செய்து பார்த்தோமானாலும் அவற்றிற்கு அடிப்படையில் அஞ்சாமையென்ற ரேகை ஒளிவிட்டுக்கொண்டிருக்கிறதைக் காண்கிறோம். அஞ்சாமை என்கிற ஆயுதத்தைத் தரித்துக்கொண்டிருந்ததினால்தான், திருநாவுக்கரசர், "நாமார்க்கும் குடியல்லோம்; நமனை யஞ்சோம்; நரகத்தி லிடர்ப்படோம்; நடலையில்லோம்; ஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோமல்லோம்; இன்பமே என்னாளுந் துன்பமில்லை" என்று வீறுகொண்டு பேசினார். அஞ்சாமையுடையவர்கள்தான் மனிதத் தன்மையில் சுலபமாக வளர்ச்சி பெறக்கூடும். இந்தியர்கள், மனிதர்களாக மதிக்கப்படுவதில்லையென்று சொன்னால், அதற்கு அவர்களிடத்திலே குடிகொண்டிருக்கிற அச்சந்தான் காரணம். சுவாமி விவேகானந்தர் ஓரிடத்தில் கதறுகிறார்: "நான் மனிதர்களை உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமாயிருக்கிறது. ஏனென்றால், இந்தியாவில் ஸ்திரீகளும் பேடிகளுந்தான் இருக்கிறார்களென்பது எனக்குத் தெரியும்." விவேகானந்தர் செய்துகொண்ட இந்தச் சங்கல்பத்தை காந்தியடிகள் செயலில் கொண்டுவந்து காட்டியிருக்கிறார்.

(அறிவோம்...)

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர