Skip to main content

காந்தி யார்? - 3 | வெ. சாமிநாத சர்மா


ஆயிரம் பேரில் ஒருவர்தான் நன்றாகப் பேச முடியும். நன்றாகப் பேச முடிந்த ஆயிரம் பேரில் ஒருவர்தான், தெளிவாகச் சிந்திக்க முடியும். தெளிவாகச் சிந்திக்கிற ஆயிரம் பேரில் ஒருவர்தான், வாழ்க்கையில் தங்களுடைய லட்சியம் இன்னதென்பதைத் தெரிந்துகொள்ள முடியும். தெரிந்துகொண்டு விட்டால் மட்டும் போதுமா? அதனை அடைய வேண்டாமா? தெரிந்துகொண்ட ஆயிரம் பேரிலே ஒருவர்தான், தங்கள் லட்சியத்தை அடைய வேண்டுமென்ற ஆவல் கொண்டு, அதனை நோக்கிப் பிரயாணஞ் செய்ய முடியும். அப்படிச் செல்வோரில் எத்தனையோ பேர், வழியில் களைப்பினால் பின்தங்கிவிடலாம்; வேறு சிலர், வேறு ஆசைகளினால் தூண்டப்பட்டு வேறு பாதைகளுக்குச் சென்றுவிடலாம்; இன்னுஞ்சிலர் லட்சியப் பிரகாசத்தினால் கண் கூசிக் குருடர்களாய் மேல் நோக்கிச் செல்லாமலேயே பின் தங்கிவிடலாம். இங்ஙனம் லட்சியப் பாதையானது மகா கடினமான பாதையாயிருந்தபோதிலும், யாரொருவர் அந்தப் பாதையில் அடி எடுத்து வைக்கிறார்களோ, அடியெடுத்து வைக்கக்கூடிய ஆற்றலையும் துணிச்சலையும் பெறுகிறார்களோ, அவர்களெல்லோரையுமே பொதுப்படையாக மகான்களென்று உலகம் அழைக்கிறது.

மகான் தன்மைக்குரிய இந்த மாதிரியான லட்சணங்களைக்கொண்டு காந்தியடிகளை நாம் நோக்குகிறபோது, அவர் ஒரு மகானென்பது நன்கு தெரியும். சிலருடைய வாழ்க்கையில், இளமையிலேயே இந்த மகான் தன்மை விகாசமடைகிறது. இன்னுஞ் சிலரிடத்தில், வாழ்க்கையின் பிற்பகுதியிலேயே விகாசமடைகிறது. எப்படி, எப்பொழுது விகாசமடைந்தாலும், சிறு பிராயத்திலேயே இதற்கு முளை தோன்றிவிடுகிறது. ஆனால், இந்த முளையை ஒரு சிலரால்தான் அறியமுடிகிறது. பெரும்பாலோரால் அறிய முடிவதில்லை. காந்தியடிகளின் சுய சரித்திரத்தை ஊன்றிப் படிப்போர்க்கு இந்த உண்மை புலனாகும். காந்தியடிகள் ஒரு மகானென்பதை இந்திய மகாஜனங்கள் தெரிந்துகொள்ள ஆரம்பித்ததெல்லாம், அவர் இந்தியாவில் ரெளலட் சத்தியாக்கிரகம் தொடங்கி நடத்திய பிறகுதான். ரவீந்திரநாத் தாகூர் 1921-ஆம் வருஷம் சபர்மதி ஆசிரமத்திற்கு விஜயம் செய்திருந்தபோது, காந்தியடிகளுக்கு மகாத்மா பட்டஞ் சூட்டினார். அது முதற்கொண்டே அந்தப் பெயர் உலகத்தில் முழங்கிக்கொண்டு வருகிறது. ஆனால், இந்த மகாத்மா தன்மை, காந்தியடிகளிடத்தில் இருப்பதை அவருடைய 'அரசியல் குரு'வான கோபாலகிருஷ்ண கோகலே, 1912-ஆம் வருஷத்திலேயே தெரிந்துகொண்டுவிட்டார். அவர் கூறுகிறார்:

''வீரர்களும் மகான்களும் எந்தத் தன்மைகளைக்கொண்டு தயாரிக்கப்படுகிறார்களோ அந்தத் தன்மைகளெல்லாம் காந்தியடிகளிடத்தில் இருக்கின்றன. இதில் சந்தேகமில்லை. இது தவிர, தம்மைச் சுற்றியுள்ள சாதாரண மனிதர்களை வீரர்களாகவும் மகான்களாகவும் ஆக்கிவிடக்கூடிய அபாரமான ஆத்ம சக்தியும் அவரிடத்தில் இருக்கிறது.''

இந்த மகான் தன்மை அவருக்கு எப்படி ஏற்பட்டது? அவரை ஏன் ஜனங்கள் மகாத்மாவென்று போற்றுகிறார்கள்? அவரைக் காட்டிலும் அறிவு, அநுபவம், வயது முதலியவைகளில் சிறந்தவர்கள் பலரிருக்க, அவருக்கு மட்டும் ஏன் இந்தத் தனிமதிப்பு? இதைச் சிறிது விளக்குவோம். அல்டோஸ் ஹக்ஸ்லி (Aldous Huxley) என்ற நமது சமகாலத்து மேனாட்டு அறிஞன் ஓரிடத்தில் கூறுகிறான்:

“அரசியல் பரம்பரை இருக்கிறதே அது மகா அயோக்கியத்தனமான பரம்பரை. உலகத்தில் இரண்டு விதமான தர்மங்கள் இப்பொழுது அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. தனிப்பட்ட நபர்களுக்கென்று ஒரு தர்மம்; ஜாதிக்கென்று அதாவது தேசத்திற்கென்று வேறு தர்மம். ஒரு மனிதன் தன் சொந்த வாழ்க்கையில் யோக்கியனாகவும், கருணை நிறைந்தவனாகவும், மற்றவர்களுடைய குறை நிறைகளைப் பாராட்டுகிறவனாகவும் இருக்கிறான். ஆனால், அதே மனிதன், ஒரு ஜாதியின் பிரதிநிதியாகவோ, அல்லது ஏதோ ஒரு கட்சியினுடைய பிரதிநிதியாகவோ வருகிறபோது, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தக் காரியங்களைச் செய்தால் இழிவு என்று கருதுகிறானோ அதே காரியங்களைக் கூச்சமின்றிச் செய்கிறான். அப்படிச் செய்வதுதான் நியாயமென்றும் சாதிக்கிறான்.

இதனால் என்ன ஏற்படுகிறதென்றால், ஒரு ஜாதிக்கு, சக்தியும் புகழும் இருக்கிறதென்றும், ஆனால் அதற்கு ஒழுக்கம் அல்லது தர்மம் என்பதே கிடையாதென்றும் நாம் கருதிக்கொள்வதாக ஏற்படுகிறதல்லவா? ஜாதி என்ற முறையில் நாம் கேவலமாக நடந்துகொள்வது சரியென்று நம்புகிறோம்.”

காந்தியடிகள், அரசியலை ஒரு பாரமார்த்திக நிலைக்கு உயர்த்தியிருக்கிறார் என்று சொல்வதின் தாத்பரியமெல்லாம் இதுதான். அதாவது, நாம் நமது சொந்த விவகாரங்களில் எந்த நியாயத்தை, எந்த தர்மத்தை அநுசரித்து நடக்கிறோமோ அதே நியாயத்துடனும் தர்மத்துடனும் பொது விவகாரங்களிலும் நடந்துகொள்ள வேண்டும். சொந்த வாழ்க்கையில் நம் சகோதரர்களுடனும், உற்றார் உறவினர்களுடனும் எப்படி கண்ணியமாகவும் பொறுப்பறிந்தும் நடந்து, அதன் மூலமாக அவர்களுடைய அபிமானத்தையும் நன்மதிப்பையும் பெறவேண்டுமென்று ஆவல் கொள்கிறோமோ அதைப்போல், தேசிய விவகாரங்களிலும் நாம் நடந்துகொள்ள வேண்டும். அதாவது, நாம் வேறே, தேசம் வேறே என்று பிரிக்கக்கூடாது. தேச வாழ்க்கையிலேதான் நமது வாழ்க்கையை ஐக்கியப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படிக்கின்றி நமக்கென்று ஒரு வாழ்க்கையும் தேசத்திற்கென்று ஒரு வாழ்க்கையுமாக, வாழ்க்கையை இரண்டு கூறுபடுத்திக்கொண்டு நடப்போமானால் நாமும் அபிவிருத்தியடைவதில்லை; தேசமும் பாழடைகிறது. நம்முடைய அரசியல் தலைவர்களில் பெரும்பாலோர் வாழ்க்கையை, இங்ஙனம் இரண்டு கூறுபடுத்தியே பார்க்கிறார்கள். பொதுஜன அபிப்பிராயம், அவர்களுக்கு மதிப்புக்கொடுக்கவில்லையென்று சொன்னால், அஃது அதனுடைய குற்றமாகுமா? ஆனால், காந்தியடிகள், தமது வாழ்க்கையை ஒரு மொத்தத் தொகுப்பாகவே பார்க்கிறார். தாம் வேறே, தேசம் வேறே, என்று பார்ப்பதில்லை. தேசத்தின் க்ஷேமத்திலேதான் தம்முடைய க்ஷேமம் இருக்கிறதென்பதை அவர் பலமுறை தம் செயல்களால் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். தேசத்திற்காக அவர் இருக்கிறாரே தவிர, அவருக்காக தேசம் இல்லை. இந்த மாதிரியான விரிந்த மனப்பான்மையை, எல்லா அரசியல் தலைவர்களிடத்திலும் நாம் காண்கிறோமா? இல்லையே. இந்தியாவிலே மட்டுமல்ல, உலகத்திலுள்ள எல்லா அரசியல்வாதிகளிடத்திலும் இந்த இரண்டுவித வாழ்க்கைத் தோற்றங்கள்தான் காணப்படுகின்றன. போரும் பகைமையும் உலகத்திலே இது போழ்து மலிந்திருப்பதற்கெல்லாம் காரணம், அரசியல்வாதிகள் இங்ஙனம் இரண்டுபட்ட வாழ்க்கையை நடத்துவதுதான். மகாத்மா காந்தியினிடத்தில் இந்த இரண்டுபட்ட தன்மை இல்லாததினாலேயே அவர் உலகத்தினரால் போற்றப்படுகிறார்.

ஸ்தூலமாகப் பார்க்கிறபோது, இன்றைய மனிதன் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறான். அவனுடைய அறிவு, திறமையின் கோபுரத்தின் மீது கொலுவிருக்கிறது. நமக்கு விவசாய நிலங்களும், போக்குவரவு சாதனங்களும் அதிகப்பட்டிருக்கின்றன. ஒவ்வொருவர் வீட்டிலும் ரேடியோ இருக்கிறது. பிரதியொருவனும் சொந்தமாக, ஓர் ஆகாய விமானத்தை வைத்துக்கொண்டிருக்கக்கூடிய காலம் விரைவிலே வரக்கூடும். உலகத்தில் வியாதியே இல்லாதபடி செய்யப்பட்டுவிடலாம். தொழிலாளர்களுக்கு வயோதிகச் சம்பளம் கொடுத்து அவர்களைக் கவலைக் கடலினின்று கரையேற்றிவிடலாம். இவையெல்லாம் நடைபெற்றுவிட்டாலும், மனிதன் சாந்திபெறக் கூடுமா? அவன், தன் வாழ்க்கையில் ஆறுதல் காண்பானா? மாட்டான். வாழ்க்கையென்பது என்ன? வயிறு நிறைய ஆகாரம் உண்பதா? அல்லது அறிவுக்கடலில் மட்டும் மிதந்து கொண்டிருப்பதா? இல்லை; இல்லை. எவனொருவன் தன் அந்தரங்கத்தில் இன்பத்தையடைகிறானோ, அதாவது இதய சாந்தி பெறுகிறானோ அவன்தான் வாழ்க்கையை நடத்துகிறவன். இந்தத் தூய வாழ்க்கையைப் பொதுவாக உலக மக்களுக்கு, சிறப்பாக இந்திய மகா ஜனங்களுக்கு அளிக்க வேண்டும்மென்பதுதான் காந்தியடிகளின் ஆவல். இதற்காகவே அவரை எல்லோரும் போற்றுகிறார்கள். எல்லாத் தலைவர்களிடத்திலும் இந்த ஆவல் இருக்கிறதா? இல்லையே.

அரசியல் தலைவர்களில் பெரும்பாலோர், மனிதனுடைய புறத்தேவைகளை மட்டும் கவனித்துக்கொண்டு செல்கிறார்கள். ஆனால், காந்தியடிகள் மனிதனுடைய அகத்தேவையொன்று இருக்கிறதென்பதை உணர்ந்து அதனைப் பூர்த்திசெய்ய விழைகிறார். இதற்காக அவர், புறத்தேவைகளைப் புறக்கணிக்கவில்லை. ஒரு செடியானது செழிப்பாக வளர வேண்டுமானால் அதற்கு எப்படி நல்ல உரம் போட்டு, ஒழுங்காக நீர் பாய்ச்சிக்கொண்டு வரவேண்டுமோ, அதைப்போல், மனிதனுடைய அக வளர்ச்சியானது, அவனுடைய புற வளர்ச்சியை ஒட்டியிருக்கிறது. ஏதோ ஏகதேசமாக ஒரு சில மகான்கள்தான், புறத்தைப் பொருட்படுத்தாமல் அக வாழ்க்கையில் முன்னேற்றமடைந்திருக்கிறார்கள். ஆனால், சாதாரண ஜனங்களைப் பொறுத்தமட்டில், அவர்களுடைய புறத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொடுத்தால்தான், அவர்களுடைய அக வளர்ச்சிக்கு நாம் வழி காட்ட முடியும். காந்தியடிகளின் உறுதியான நம்பிக்கை இதுதான். மனிதனுடைய வயிற்றுப் பசியைத் தீர்ப்பதைக் காட்டிலும் அவனுடைய ஆத்மப் பசியைத் தீர்ப்பதுதான் சிரேஷ்டமென்று ஒரு சமயம் ரவீந்திரநாத் தாகூர் கூறியதற்குக் காந்தியடிகள் என்ன விடையளிக்கிறார் பாருங்கள்!

"கவிஞர் தமது கவிதா உணர்ச்சிக்குப் பொருத்தமாக எதிர்காலத்தின் பொருட்டு வாழ்கிறார். நம்மையும் அந்த மாதிரி வாழுமாறு சொல்கிறார். காலை நேரத்திலே, பட்சிகள் ஆகாயத்தில் குதூகலமாகப் பறப்பதை அவர் நமக்கு வருணித்துக் காட்டுகிறார். வாஸ்தவம். இந்தப் பட்சிகளுக்கு வயிறு நிறைய ஆகாரம் கிடைத்துவிட்டது. முந்திய நாள் இரவு ஓய்வு கொண்டதினிமித்தம் அவைகளின் தேகத்தில் நல்ல ரத்தம் ஓடிக்கொண்டிருக்க, ஆகாயத்தில் சிறகு விரித்துப் பறக்கின்றன. ஆனால் நான் காண்கிற பட்சிகள் சிறகுகளை அசைக்கக்கூட முடியாத பலஹீனத் தோடிருக்கின்றன. என் ஆசை வார்த்தைகள், அந்தச் சிறகுகளுக்குப் பலத்தை அளிக்கவில்லை. இந்திய ஆகாயத்தின் கீழ் வாழும் மனிதப் பறவையானது, முன்னாளிரவு எவ்வளவு பலஹீனத்துடன் படுக்கச்சென்றதோ அதைவிட அதிக பலஹீனமாக மறுநாள் காலையில் எழுந்திருக்கிறது. லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு, எப்பொழுதும் விழிப்பு நிலையிலேயே இருக்கவேண்டியிருக்கிறது; அல்லது மெய்மறந்த நிலையில் இருக்கவேண்டியிருக்கிறது. இந்த நிலையைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால், இந்த நிலையை நாம் அனுபவிக்கத்தான் வேண்டும். நோய்வாய்ப்பட்டுக் கதறும் நோயாளிகளை ஒரு பாட்டுப்பாடி என்னால் குணப்படுத்த முடியவில்லை. பசி நோயால் அவதியுறும் லட்சக்கணக்கான இந்திய மக்கள் ஒரே ஒரு பாட்டைத்தான் கேட்கிறார்கள். அஃதென்ன? பலத்தை அளிக்கக்கூடிய ஒரு கவளச் சோறு.''

பொதுவாக உலகத்திலுள்ள ஏழை மக்களும், சிறப்பாக இந்திய மக்களும் காந்தியடிகளை ஒரு தெய்வமாகக் கொண்டாடுவதின் ரகசியம் இதுதான். அவர் ஜனங்களுடைய தேவைகளைத் தெரிந்துகொண்டு மட்டும் இருக்கவில்லை; உணர்ந்து, அந்த உணர்ச்சியைச் செயல் மூலமாக வெளிப்படுத்துகிறார். மற்றத் தலைவர்கள் ஜனங்களுடைய தேவைகளைத் தெரிந்துகொண்டிருப்பதோடு மட்டும் திருப்தியடைகிறார்கள். சாத்வீக எதிர்ப்பு முறையை முதன் முதலாகக் கையாண்டவர் காந்தியடிகளேயென்றும், இந்த ஆயுதத்தைக் கண்டுபிடித்தவர் அவரேயென்றும், இதற்காகவே உலகம் அவரைப் போற்றுகிறதென்றும் சிலர் சொல்லுகிறார்கள். இதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது. இதற்காக காந்தியடிகளை உலகம் போற்றுகிறதென்று சொன்னால், அது மலிவான போற்றுதல் என்றுதான் நாம் கொள்கிறோம். அதாவது அவருடைய உயர்நிலைக்கு இது தக்க மதிப்பல்ல. இதைச் சிறிது விஸ்தரித்துக் கூற விரும்புகிறோம்.

(அறிவோம்...)

Comments

Most Popular

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.