Skip to main content

காந்தி யார்? - 2 | வெ. சாமிநாத சர்மா


இங்கிலாந்தில் மிஸ் மாட் ராய்டன் என்ற ஓர் அம்மையார். கிறிஸ்துவ ஞானிகளின் கூட்டத்திலே இவருக்கு அதிக மதிப்பு உண்டு. காந்தியடிகள், 1931-ஆம் வருஷம் வட்டமேஜை மகா நாட்டை முன்னிட்டு லண்டனுக்குச் சென்றிருந்த போது, ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு மண்டபத்திற்கு வெளியே வந்தார். பிறகு நடைபெற்றதை மேற்படி மாட் ராய்டனே வருணிக்கட்டும்:

''அவரை ஏராளமான ஜனங்கள் சூழ்ந்துகொண்டுவிட்டார்கள். என்னுடைய மோட்டார் எங்கே இருக்கிறதென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு எதிரில் ஒவ்வொரு வண்டியும் வந்து வந்து போகிறது. தங்களுடைய வண்டியில் மகாத்மா ஏறிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை அந்த ஒவ்வொரு மோட்டார் சொந்தக்காரருக்கும். அன்று நிரம்பக் குளிர். அதிகமான உடைகளையும் மகாத்மா தரித்துக்கொண்டிருக்கவில்லை. அவரை அதே இடத்தில் அதிக நேரம் தாமதித்து வைத்திருக்கக்கூடாதென்று எண்ணினேன். ‘அகப்பட்ட வண்டியில் போய்விடுங்கள்’ என்று அவரிடம் சொன்னேன். ‘இல்லை; உங்களுடைய வண்டிக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்’ என்று கூறினார். ஹா! அந்த வார்த்தைகள் எனக்கு மகுடாபிஷேகம் செய்தது போலிருந்தன. 'அவருக்கென்று ஒன்றுமில்லை; ஆனால் எல்லாம் அவருடையனவே' என்ற யேசுநாதரின் சிஷ்யர் ஒருவருடைய வாசகம் எனக்கு அப்பொழுது ஞாபகம் வந்தது. காந்தியடிகளுக்கென்று ஒரு மோட்டார் கிடையாது. ஆனால், அவரைச் சுற்றி எத்தனை மோட்டார்கள்!''
'ரகுபதி ராகவ ராஜாராம் - பதிதபாவன சீதா ராம்' என்ற நாமாவளியை எல்லோர் இதயத்திலும் ஊன்றிவிட்டுச் சென்றவரும், ‘புனா கந்தர்வ மஹா வித்யாலயம்' என்ற சங்கீத ஸ்தாபனத்தின் தந்தையும், ஏறக்குறைய ஒவ்வொரு காங்கிரஸ் மகா சபையின் போதும், தம் சிஷ்யர்களுடன் விஜயஞ் செய்து பாரதமாதாவின் மீது இசையமுதைப் பொழிந்து, அனைவருடைய இதயத்தையும் குளிர்வித்துக்கொண்டிருந்தவருமான காலஞ்சென்ற பண்டித விஷ்ணு திகம்பரர், தமது சங்கீதப் புலமை, தெய்வீகத்தன்மையடைய வேண்டுமென்பதற்காக, சங்கீதமே அறியாத, ஆனால் சங்கீதத்தின் இங்கிதத்திலே தம்மை இழந்துவிடும் ஆற்றல் வாய்ந்த காந்தியடிகளின் தலையசைவையும், அருட்பார்வையையும் எதிர்பார்த்தாரே தவிர, ஸ்வர, சுருதி, தாள பேதங்களைப் பற்றிச் சச்சரவிட்டு அந்தச் சச்சரவில் சங்கீதத்தையே இழக்கும் சாமர்த்தியமுடைய சங்கீத வித்துவான்களின் கரகோஷத்தை எதிர்பார்த்தாரில்லை.
காந்தியடிகள், லண்டனில் பாரிஸ்டர் பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தபோது மேனாட்டு நடனத்தைக் கற்றுக்கொண்டார் என்பதை ஞாபகம் வைத்துக்கொண்டிருந்தோ என்னவோ, இப்பொழுது பால் ரோபெஸன் (Paul Robeson) என்ற நீக்ரோ நடிகர், அவர் முன்னிலையில், தமது நடிகத் திறமையைக் காட்ட விழைகிறார்.
உலகப் பிரசித்தி பெற்ற காமா என்கிற பயில்வான், தமது தேக வலிமைக்கு அவருடைய ஆசீர்வாத முத்திரை தேவை என்று விழைகிறார். காந்தியடிகள், சிறு பையனாகப் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, தேகப்பயிற்சி விஷயத்தில் சிறிதுகூடக் கவலை செலுத்தாமலிருந்ததும், ஒரு நாள் தேகப் பயிற்சி வகுப்புக்குச் செல்லாமலிருந்ததற்காக இரண்டணா அபராதம் செலுத்தியதும் காமாவுக்கு ஞாபகமில்லை போலும்!
‘கீளார் கோவண முடுக்கும்’ காந்தியடிகளிள் கையைப் பிடித்துக் குலுக்கிப் பெருமையடைய அரச குடும்பத்தினர் அநேகர் ஆவல் கொள்கிறார்கள். இங்கிலாந்திலும் இத்தலியிலும் அரச குடும்பத்தினர் அவருக்கு அளித்த உபசாரங்களை யார் மறக்க முடியும்?
காந்தியடிகள் சிறந்த ஓர் அரசியல்வாதியென்றோ, ராஜதந்திரியென்றோ சொல்லமுடியாது. தாம் அந்த மாதிரி அழைக்கப்பட்டால், அதை அவர் விரும்புவதுமில்லை. தம்மை ஒரு சாதாரண விவசாயி என்று சொல்லிக்கொள்வதில்தான் அவர் பெருமையும் திருப்தியுமடைகிறார். ஆயினும், உலகத்தையே ஆட்டி வைக்கும் சாமர்த்தியமுள்ள அரசியல்வாதிகளும் ராஜதந்திரிகளும் அவரைக் காணவும் பின்வாங்குகிறார்கள். பிடிவாதமுள்ள ராஜதந்திரியான ஸ்ரீ வின்ஸ்டன் சர்ச்சிலும், தந்திர அரசியல்வாதியான லார்ட் வில்லிங்டனும் அவரைக் காணக்கூட மறுத்துவிட்டார்கள்!
இவைகளையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டு பார்க்கிறபோது, காந்தியடிகள் ஒரு புதிர் என்ற முடிவுக்குத்தான் யாரும் வரக்கூடும். இந்தப் புதிரை விடுவிக்க, அநேக அறிஞர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் இந்தப் புதிரிலேயே சிக்கிக்கொண்டுவிட்டார்கள். உண்மையிலேயே அவர் ஒரு புதிரா? இதற்கு விடை. 'ஆம்' என்றும் சொல்லலாம், 'இல்லை' என்றும் சொல்லலாம். அரசியல் பீடத்தில் அவரை வைத்திருத்திப் பார்க்கிறபோது, அவருடைய சொற்களிலும் செயல்களிலும் அநேக முரண்பாடுகளிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், மகான் தன்மை என்னும் பரிசுத்த ஆகாயத்தில், அதாவது மேலான நிலையில், அவர் எவ்விதக் களங்கமுமில்லாத ஒரு சந்திரனாகவே பிரகாசிக்கிறார். அவர் ஒரு மகான்; வீரன்; இவையிரண்டினைக் காட்டிலும் மேலாக அவர் ஒருமனிதன். இந்த அம்சங்களைப் பற்றிச் சிறிது விஸ்தரித்துக் கூறுவது இந்தக் கட்டுரையின் நோக்கம்.
காந்தியடிகளை, 'மகாத்மா'வென்று பட்டஞ்சூட்டியே நாம் போற்றுகிறோம். மகாத்மாவென்றால் என்ன அர்த்தம்? இதை ரவீந்திரநாத் தாகூர் ஓரிடத்தில் பின்வருமாறு விளக்குகிறார்:
“தனி மனிதனிடத்திலுள்ள 'நான்' என்பது விடுதலை பெற்று, எல்லோரிடத்திலும் 'தான்' ஆகப் பரிணமிக்கிற போது, மகாத்மாவாகிறது. உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளையும், யாரோருவர், 'தாம்' ஆகப் பார்க்கிறாரோ அவர்தான் மகாத்மா.”
சாதாரண விவகார பாஷையில் இதைச் சொல்லப்போனால், யாரொருவர் உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளிடத்திலும் அன்பு செலுத்துகிறாரோ, எல்லோருடைய துன்பத்தைத் தமது துன்பமாகவும், எல்லோருடைய இன்பத்தைத் தமது இன்பமாகவும் ஏற்றுக்கொள்கிறாரோ அவரே மகாத்மா. இப்படிப்பட்டவர்களை மகான்களென்றும், மகா புருஷர்களென்றும், தீர்க்கதரிசிகளென்றும், பரம ஞானிகளென்றும், லட்சியத்திற்காக உயிரைத் துரும்பென மதிக்கும் மகா வீரர்களென்றும் பல பட அழைப்பது வழக்கம். இவர்கள் தங்களுக்காக வாழ்வதில்லை; பிறருக்காகவே வாழ்கிறார்கள். 'பணிசெய்து கிடப்பதுதான்' இவர்கள் கடன்.
இத்தகைய மகான்களின் வாழ்க்கை வரலாறுகளை நாம் சிறிது ஊன்றிப் பார்த்தோமானால், துன்பமும் துயரமுமே இவர்களுடைய வாழ்க்கையின் நியதிகளாயிருக்கின்றன. இவர்கள், அநேக சமயங்களில் தாங்களே வலிய, துன்பத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்; சில சமயங்களில் பிறரால் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அந்தத் துன்பங்களையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. அவற்றைப் பார்த்து இவர்கள் பரிகசிக்கிறார்கள்; புன்சிரிப்புச் சிரிக்கிறார்கள். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஹென்ரி தோரூ (Henry Thoreau) என்ற ஓர் அமெரிக்க ஞானி இருந்தான். அவன் சிறைவாசத்தை அநுபவித்தான். அப்பொழுது கூறுகிறான்:
"என்னைச் சுற்றி இருக்கும் இந்தச் சிறைச்சாலைச் சுவர்களைக் கட்டுவதற்காகச் செலவழிக்கப்பட்ட கல்லும் சுண்ணாம்பும் வீண்தான். சிறையதிகாரிகள், என் தேகத்தை எவ்வளவு பத்திரமாகப் பூட்டி வைக்கிறார்கள்! ஆனால், என்னுடைய மனம், எவ்விதத் தங்குதடையுமில்லாமல் அவர்களோடேயே உலவிக்கொண்டிருக்கிறதே! பாவம்! சிறு பிள்ளைகள், தங்களுக்கு வேண்டாதவர்கள் யாராவது எதிர்ப்பட்டால், அவர்களை நேராக எதிர்க்கத் தைரியமில்லாமல், தங்களுடைய நாயைப் பிடித்துத் திட்டுவார்கள். அதைப்போலிருக்கிறது இந்தச் சிறையதிகாரிகள் என்னைப் பூட்டிவைத்திருப்பது!"
இதைப்போல் மகான்கள் சிறையையோ சங்கிலியையோ லட்சியஞ் செய்யமாட்டார்கள். 'மகான்களின் புனிதத் தன்மையானது, அதாவது தூய மனமானது, தூக்குமரத்தில்தான் இன்பம் நுகர்கிறது!' என்ற வாசகப்படி, இவர்கள் உலக வாழ்க்கையிலே எவ்வளவு துன்பங்களையநுபவித்தாலும், அவைகளைக் கண்டு அஞ்சிப் பின்வாங்குவதில்லை; சலிப்புக் கொள்வதில்லை. அதற்கு மாறாக, இவர்களுடைய மகான் தன்மையானது, மேற்படித் துன்பங்களை இன்னும் தீவிரமாக எதிர்த்துப் போராடும்படி இவர்களைத் தூண்டுகிறது. இப்படிப் போராடிப் போராடி இவர்கள் உலகத்துக்குச் சாந்தியை வாங்கிக்கொடுக்கிறார்கள். இவர்களுடைய துன்பத்தினால் உலகம் இன்புறுகிறது.
இவர்கள் ஏன் வலிய இப்படித் துன்புறுகிறார்கள்? எல்லா ஜீவராசிகளிடத்திலும் இவர்கள் கொண்டுள்ள அன்புதான் இதற்குக் காரணம். அன்பும் துன்பமும் இணைபிரியாத இரட்டைச் சகோதரர்கள் மாதிரி. ''இவையிரண்டும் மனிதனுடைய இரண்டு கண்கள் போலிருக்கின்றன'' என்கிறார் அறிஞர் ராதாகிருஷ்ணன். கண்களில்லாதவன் மனிதனாக மாட்டான். அதைப்போல் அன்பு செலுத்தாதவர்களும் துன்பமநுபவியாதவர்களும் மனிதர்களாகமாட்டார்கள். துன்பத்திற்குப் பயந்து அன்பு செலுத்த மறுக்கிறவன் மனிதனல்ல; அவன் ஒரு ஜடவஸ்து; எதற்கும் உதவாத ஒரு பிண்டம். தாந்தே என்ற இத்தாலிய மகா கவிஞன் கூறிய மாதிரி 'உலகத்தினிடம் அன்பு செலுத்துகிற மகான்கள் எந்த யுகத்தில் அவதரித்தபோதிலும் அவர்கள் மகத்தான துயரமென்னும் மகுடத்தையே அணிந்துகொண்டிருக்கிறார்கள்.' எவனொருவன் உண்மையாகவே அன்பு செலுத்துகிறானோ அவன் துன்பமநுபவிப்பதினின்று தப்ப முடியாது. எவ்வளவுக்கெவ்வளவு ஒருவன் மற்றவர்கள்மீது அதிகமாக அன்பு செலுத்துகிறானோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக அவன் துன்பத்தை அநுபவிக்கிறான். ஒரு தாய், தன் குழந்தையின் இன்பத்திற்காக எத்தனையோ விதமான துன்பங்களை அநுபவிக்கிறாள். அப்படி அநுபவிப்பதிலே ஒரு திருப்தி கொள்கிறாள். அந்தத் திருப்தியே அவள் அடைகிற இன்பம். அதைப் போலவே, மகான்களுடைய அன்பும் இருக்கிறது. தாய், தன் குழந்தையினிடத்தில் அன்பு செலுத்தாமல் எப்படி இருக்கமுடியாதோ, அப்படியே மகான் தன்மையுடையவர்களும், மற்றவர்களிடத்தில் அன்பு செலுத்தாமலிருக்க முடியாது. தாய் எப்படி, அந்த அன்பின் மூலமாகத் துன்பத்தை மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறாளோ அப்படியே மகான்களும் துன்பத்தை வலிய ஏற்றுக்கொள்கிறார்கள்.
இங்ஙனம் இவர்கள் அன்பையும் துன்பத்தையும், ஒரு கண் கொண்டு பார்ப்பதினால்தான் இவர்களுடைய செயல்களில் அநேக முரண்பாடுகள் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், இவர்கள், தங்களைப் பொறுத்தமட்டில் அன்பெனும் உயர்ந்த சிகரத்தில் இருக்கிறார்கள். ஆனால், கீழே அதாவது உலகத்திலே, அறியாமை, வறுமை முதலிய துன்பங்கள் நிறைந்திருப்பதைப் பார்க்கிறார்கள். இவர்கள் இதயம் துடிதுடிக்கிறது. பரம கருணையினால், தங்கள் உச்ச நிலையிலிருந்து கீழே இறங்குகிறார்கள். மேலான உண்மைகளை உபதேசிக்கிறார்கள். அவைகளை அறிந்துகொள்ளக்கூடிய தகுதி ஜனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதாவென்பதை இவர்கள் பார்ப்பதில்லை. ஏனென்றால், அந்த ஜனங்கள் தங்களுடைய துன்ப நிலையை இன்ப நிலையாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் சிறந்த உண்மைகளை உபதேசிக்கிறபோது, அவை அவர்களுக்கு முரண்பாடாகவே தெரிகின்றன. இரண்டு கடல் நீர்கள் ஒன்று சேர்கிறபோது, இரண்டுக்கும் வேறுபாடு நன்றாகத் தெரிகிறதுபோல், மேலான தன்மையும் கீழான தன்மையும் ஒன்று சேர்கிறபோது, சில மாறுபாடுகள் இருக்கவே செய்யும். அடிப்படையில் ஒன்றுதான். எல்லாம் நீர்தான். நீரின் நிறத்தில், கனத்தில், கலப்பில், வித்தியாசங்கள் இருக்கக்கூடும்.
ஆனால், இப்படிப்பட்ட முரண்பாடுடையவர்களாலேயே உலகத்திற்கு நன்மை செய்ய முடியும். இவர்கள்தான் உலகத்திற்கு நன்மை செய்திருக்கிறார்கள். பிரபஞ்ச இதிகாசம், இந்த உண்மையை நமக்குச் சதா அறிவுறுத்திக்கொண்டிருக்கிறது. உலகத்திலே தோன்றின எந்தப் புரட்சியை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள். தங்களுடைய சுற்றுச் சார்பைக் கண்டு அதிருப்தி கொண்டவர்கள்தான், புரட்சிகளுக்கெல்லாம் காரணர்களாயிருக்கிறார்கள். இவர்களுடைய சமகாலத்தவர் இவர்களைக் கிளர்ச்சிக்காரரென்றும், கலகக்காரரென்றும், புரட்சிக்காரரென்றும் சொல்லி, இவர்களைப் பலவிதமாக இம்சிக்கிறார்கள். ஆயினும், இவர்கள் புதிய கொள்கைகளை, புதிய இயக்கங்களை விதைத்துவிட்டு மறைந்து விடுகிறார்கள். வருங்கால சந்ததியார், இந்த விதையிலிருந்து கிடைத்த மகசூலை அநுபவிக்கிறார்கள். அப்பொழுதுதான் இவர்களுடைய பெருமை தெரிகிறது. மகான்களென்று இவர்கள் போற்றப்படுகிறார்கள். புத்தர்பிரான், தமது காலத்தில் நிறைந்திருந்த மூட நம்பிக்கைகளையும், வெற்றுச் சடங்குகளையும் எதிர்த்துப் போராடினார். பல பேருடைய பரிகாசத்திற்கும் எதிர்ப்புக்கும் ஆளானார். யேசுநாதர், தம்மைச் சுற்றியிருந்த ரோம ஏகாதிபத்தியத்தின் போலித்தனத்தையும் ஆடம்பரத்தையும் எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார். ஆனால், ஜனங்கள் அவர் மீது கல்லெறிந்தார்கள்; சிலுவையிலே அறைந்தார்கள். பிற்காலத்திலே தோன்றின ஸாக்ரடீஸ் என்ன, மார்ட்டின் லூதர் என்ன, பிரெஞ்சு புரட்சிக்கு, விதையூன்றின ரூஸ்ஸோ என்ன, கார்ல் மார்க்ஸ் என்ன, லெனின் என்ன, இப்படிப்பட்டவர்கள் புரட்சிக்காரர்களென்று முத்திரையிடப்பெற்று அநேக அவதிகளுக்குட்படுத்தப்பட்டார்கள். ஆனால், இவர்களெல்லோரும் மகான்கள்.
இவர்கள் வெளிப்பார்வைக்கு அநாகரிகர்கள் போலவும் பித்தர்கள் போலவும் நடந்துகொள்ளலாம். ஆனால், உலகத்தை நாகரிகப்படுத்தவும், உலகத்தின் பித்தத்தைத் தெளிவிக்கவுமே இவர்கள் பாடுபடுகிறார்கள். நாம் இப்பொழுது நம்மை நாகரிகர்கள் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் நாம் நாகரிகத்தையடைந்திருக்கிறோமா? நாகரிக வாழ்க்கையின் அடிப்படையென்னவென்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு அதற்குப் பதில் சொல்லுகிற முகத்தான் ஓர் அறிஞன் கூறுகிறான்:
''ஒரு சமுதாயத்தில், வலியார், எளியாருடைய சுமையை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அந்தச் சமுதாயத்தின் வாழ்க்கையானது நாகரிகமடைகிறது.''
இந்த அளவு கொண்டுதான் மகான்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள். உள்ள நிலையைக் கண்டு இரங்குகிறார்கள்; அதிருப்தி கொள்கிறார்கள். விளைவது என்ன? புரட்சி அல்லது சிறைவாசம் அல்லது தூக்குமேடை.
(அறிவோம்...)

Comments

Most Popular

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

சிறுகதை என்றால் என்ன? | க. நா. சுப்ரமண்யம்

சி றுகதை என்றால் என்ன ? உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும் , கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது - உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும் , கதை என்றால் என்ன என்றும் கேள்விகள் தோன்றுகின்றன. இரண்டாவது கேள்விக்குப் பதில் முதலில் சொல்லிப் பார்க்கலாம். அத்தைப் பாட்டி கதையிலிருந்து , கம்பராமாயணத்தின் கருப்பொருள் வரையில் , ஏசாப்புக் கதைகளிலிருந்து மஹாபாரதத்து குருக்ஷேத்திரம் வரையில் , எல்லாமே கதையை ஆதாரமாகக் கொண்டவைதான். நாவல் , நாடகம் என்கிற இலக்கியத் துறைக்கும் ஆதாரமான விஷயம் கதைகள்தான். சிறுகதைக்கு ஆதாரமான கதை என்ன ? எப்படியிருக்க வேண்டும் ? ஓ. ஹென்றியின் கதைகளிலே பல சம்பவங்கள் அடுக்கடுக்காக வந்து கடைசியில் ஒரு திருப்பம் திரும்பி ஒடித்து வக்கிரமாக நிற்கும். மோபஸான் கதைகளிலே அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு , ஒரு சம்பவத்தைச் செயற்கை முத்தைப்போல உருட்டித் திரட்டித் தரும். சம்பவங்களை நம்புகிற இந்த இரண்டு கதைகளுக்கும் அப