Skip to main content

பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி


சங்க காலத்திலே, மதுரை மாநகரத்திலே பாண்டிய மன்னர் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை ஆராய்ந்தார்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்கள் கூறுகின்றன. அச்சங்கங்களில் இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழ்கள் ஆராயப்பட்டன. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய செய்யுள்கள் கடைச் சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. கடைச் சங்கம் கி.பி. 300க்கு முன்பு இருந்தது என்று சரித்திரம் கூறுகிறது.

ஆனால், இக்காலத்தில் சிலர், தமிழ் வரலாற்றினையும், நாட்டு வரலாற்றினையும் நேர்மையாகவும் சரியாகவும் ஆராய்ந்து பாராமல், தமிழ்ச் சங்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றும், அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறுகின்றனர்; எழுதுகின்றனர். இவ்வாறு பிழைபட்ட ஆராய்ச்சியைக் கூறுகிறவர்களில் முதன்மை யானவர் அண்மையில் காலஞ்சென்ற திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள். வையாபுரிப் பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக இருந்தபடியால், அவர் கூறுவன எல்லாம் உண்மை என்று பாமர மக்கள் நினைக்கிறார்கள். பாமர மக்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள் கூட, ஆராய்ந்து பார்த்து உண்மை காணத் தெரியாமல், பிள்ளையவர்களின் தவறான முடிவுகளை உண்மையானவை எனக் கொண்டு மயங்குகிறார்கள். பிள்ளை யவர்கள் பதிப்பித்த நூல்கள் போற்றற்குரியவை. பழைய நூல்களைப் பதிப்பிப்பதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், சொந்தமாக அவர் எழுதிய நூல்களில் மெய்போலத் தோன்றுகிற பல தவறான செய்திகள் கூறப்படுகின்றன. பொறுப்பு வாய்ந்த உயர்ந்த பதவியிலிருந்து கொண்டு, அதிலும் சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற நிலையத்தில் தமிழ்ப் பகுதியின் தலைமைப் பீடத்தில் அமர்ந்துகொண்டு பிள்ளை யவர்கள் வெளியிட்ட தவறான ஆராய்ச்சி முடிவுகளை, அசைக்க முடியாத உண்மைகள் என்று இன்றும் பலர் கருதிக் கொண்டிருப்பதில் வியப்பில்லை. அவருடைய முடிபுகள் தவறானவை என்பதை இதுவரையில் யாரும் விளக்காமல் இருப்பதுதான் வியப்பைத் தருகிறது.

வையாபுரிப் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றவுடனே வெளிவந்த அவருடைய தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வரலாறு என்னும் ஆங்கில நூலிலே (History of Tamil Language and Literature, New Century Book House, Madras, 1956) பல பிழைபட்ட தவறான கருத்துக்கள் கூறப்படுகின்றன. இது ஆங்கில நூலாக இருப்பதனாலே, இதனைப் படிக்கிற தமிழ் அறியாத மற்றவர்கள், இவருடைய பிழையான கருத்துக்களை உண்மையானவையென்று நம்புகிறார்கள். இவருடைய தவறான கருத்துக்கள் மேலைநாடுகளிலும் பரவி, தமிழ் மொழியைப்பற்றியும் தமிழ் இலக்கியங்களைப்பற்றியும் பிழைபடக் கருதும்படி செய்கின்றன. ஏன்? நமது நாட்டிலும் இவருடைய தவறான முடிவுகளை நம்புகிறவர்களும் பலர் உள்ளனர்.

இங்கு, பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கத்தைப் பற்றிப் பிள்ளையவர்கள் கூறும் கருத்தை ஆராய்வோம். இவர் ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலிலே இவ்வாறு எழுதிகிறார்:

வச்சிரநந்தியின் பேர்போன சங்கம் கி.பி. 470இல் நிறுவப்பட்டது. தொல்காப்பியம் இச்சங்கத்தின் முதல் வெளியீடாக வெளிப்பட்டிருக்கக் கூடும் (பக்கம். 14).

கி.பி. 470 இல் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் ஒரு முதன்மையான நிகழ்ச்சி ஏற்பட்டது. அந்நிகழ்ச்சி என்ன வென்றால், மதுரையிலே வச்சிரநந்தியின் மேற்பார்வையில் நிறுவப்பட்ட தமிழ்ச் சங்கமாகும் (பக்கம் 58).

பழைய பாண்டியருக்குரிய சாசனங்களில், சின்னமனூர்ச் சிறிய செப்பேட்டுச் சாசனம் (கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) மதுரையில் இருந்த சங்கத்தைக் கூறுகிறது. தலையாலங் கானத்துப் போர் வென்ற நெடுஞ்செழியனுக்குப் பிறகு இருந்த ஒரு பாண்டியனால் மதுரைத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டதாக இச்சாசனம் கூறுகிறது. இச்சானம் கூறுகிற சங்கம் வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் ஆகும். வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் 25 ஆண்டுகள் நிலைபெற்றிருக்கக்கூடும் (பக்கம் 59).

மதுரையில் இருந்த சங்கம் என்னும் பெயரால் அழைக்கப் பட்ட மூன்று கழகங்களும் சமணர்களால் உண்டாக்கப் பட்டவை. இவை சமண சமயத்தைச் சேர்ந்த ஆசிரியர் களின் முயற்சியால் உண்டாக்கப்பட்டவை என்பதைச் சங்கம் என்னும் பெயர் ஆதரிக்கிறது (பக்கம் 60).

வச்சிரநந்தியின் சங்கத்தைப் பற்றிய தகவல்கள் கிடைக்க வில்லை. ஆனால் அச்சங்கம் ஏற்பட்ட பிறகு குறிப்பிடத் தக்க அளவு இலக்கண நூல்களும் அற நூல்களும் வெளிவந்தி ருப்பது அதனுடைய பெரிய வெற்றிக்குச் சான்றாக இருக்கிறது” (பக்கம். 161).

பிள்ளையவர்கள் இவ்வாறு தமது தமிழ் மொழி, இலக்கிய வரலாறு என்னும் ஆங்கில நூலிலே எழுதி யிருக்கிறார். இதன் தெளிவான பொருள் என்னவென்றால் “வச்சிரந்தி என்னும் சமணர் கி.பி. 470 இல் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார், சமணர்கள் தாம் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தினார்கள், வச்சிரநந்தி ஏற்படுத்திய தமிழ்ச் சங்கத்தில் தான் தொல்காப்பியம் இயற்றப்பட்டது, தொல்காப்பியமும் தமிழ்ச் சங்கமும் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தோன்றியவை என்பனவாம்”.

இவற்றை நாம் ஆராய்வோம். சின்னமனூர்ச் செப்பேட்டை இவர் ஆதாரம் காட்டுகிறார். அச்செப்பேட்டின் செய்தி இது.

தடம் பூதம் பணிகொண்டு
தடாகங்கள் பல திருத்தியும்
அரும்பசி நோய் நாடகற்றி
அம்பொற்சித்ர முயரியும்
தலையாலங் கானத்திற்
றன்னொக்க லிருவேந்தரைக்
கொலைவாளிற் றலைதுமித்துக்
குறைத்தலையின் கூத்தொழித்தும்
மஹாபாரதந் தமிழ்ப் படுத்தும்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்
மஹாராஜரும் ஸார்வ பௌமரும்
தம்மகிமண்டலங் காத்திகந்தபின்

வையாபுரிப் பிள்ளையவர்கள் மேற்கோள் காட்டாத இன்னொரு பாண்டியனுடைய செப்பேட்டுச் சாசனமும் பாண்டிய மன்னர் மதுரையில் தமிழ்ச் சங்கம் நிறுவிய செய்தியைக் கூறுகிறது. பாண்டியன் பராந்தகன் வீரநாரா யணன் எழுதிய அச்செப்பேட்டுச் சாசனத்தின் பகுதி இது:

மண்ணதிரா வகைவென்று
தென்மதுரா புரஞ் செய்தும்
அங்கதனில் லருந்தமிழ்நற்
சங்கம் இரீஇத் தமிழ்வளர்த்தும்
ஆலங்கானத் தமர்வென்று
ஞாலங்காவல் நன்கெய்தியும்
கடிநாறு கவினலங்கற்
களப்பாழர் குலங்களைந்தும்
முடிசூடி முரண்மன்னர்
எனைப்பலரு முனிகந்தபின்

(சாசனச் செய்யுள் மஞ்சரி, பக். 149)

இந்த இரண்டு செப்பேட்டுச் சாசனங்களும் பாண்டிய அரசர்களின் காலத்தில் எழுதப்பட்டவை. இச்சாசனங்கள் இரண்டும் பாண்டிய அரசர் மதுரை மாநகரத்தில் தமிழ்ச் சங்கம் வைத்து நடத்தியதைக் கூறுகின்றன. பட்டம் பகல் வெட்ட வெளிச்சம் போல் தெரிகிற இந்தச் செய்தியைப் பிள்ளையவர்கள் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிந்திருக்க வேண்டும். ஆனால், தெரிந்தோ, தெரியாமலோ மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர் சமணர் என்று கூறுகிறார். இந்தச் சாசனங்களிலே, வச்சிரநந்தியோ வேறு சமணர்களோ தமிழ்ச் சங்கம் வைத்ததாகக் கூறவில்லை; பாண்டிய மன்னர் தமிழ்ச் சங்கம் வைத்து நடத்தியதாகத்தான் கூறுகின்றன. பிள்ளையவர்கள், பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தோடு, வச்சிரநந்தியின் திராவிட சங்கத்தை இணைத்துப் பிணைத்து முடிபோடுகிறார். சாசனங்களிலும் பழைய நூல்களிலும் கூறப்படுகிறபடி பாண்டியர்கள் சங்கம் வைத்துத் தமிழாராய்ந்தார்கள் என்னும் செய்தியை அடியோடு மறைத்துவிடுகிறார். வச்சிரநந்தியின் திராவிட சங்கம் வேறு, பாண்டியரின் தமிழ்ச் சங்கம் வேறு என்பதை அறியாமல் இரண்டும் ஒரே சங்கம் என்று காரணம் கூறாமல், சான்று காட்டாமல் எழுதுகிறார். இது பிள்ளையவர்கள் செய்த முதல் தவறு. இனி, மேலே செல்வோம்.

வச்சிரநந்தி என்பவர் விக்கிரம் ஆண்டு 526இல் (கி.பி. 470) மதுரையில் திரமிள சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தேவசேனர் என்னும் சமண ஆசிரியர் தமது தர்சனசாரம் என்னும் நூலில் எழுதியிருக்கிறார். இந்தச் சான்றைக் காட்டி வையாபுரிப் பிள்ளையவர்கள் வச்சிரநந்தியின் திரமிள சங்கந்தான் பாண்டியரின் தமிழ்ச் சங்கம் என்று கூறுகிறார். இந்தச் செய்தியில், பாண்டியரின் தமிழ்ச் சங்கமும் வச்சிர நந்தியின் திரமிள சங்கமும் ஒன்று என்று கூறப்படவில்லை. பிள்ளையவர்கள் தாமாகவே இட்டுக்கட்டிக் கூறுகிறார். இனி, வச்சிரநந்தியின் திரமிள சங்கம் என்பது யாது என்பதை ஆராய்வோம்.

வச்சிரநந்தி சமண சமயத்தைச் சேர்ந்த முனிவர். இவர் மதுரையிலே திரமிள சங்கத்தை ஏற்படுத்தினார். திரமிளம் என்றாலும் திராவிடம் என்றாலும் ஒன்றே. இவற்றின் பொருள் தமிழ் என்பது. திரமிள சங்கம் என்றால் தமிழ்ச் சங்கம் என்பது பொருள். ஆனால், வச்சிரநந்தி ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் தமிழ் மொழியை ஆராயும் சங்கம் அன்று; தமிழ்ச் சங்கம் அன்று, தமிழ்ச் சங்கம், சமண சமய சம்பந்தமான சங்கம். அதாவது, சமண சமயத்தைப் பரப்புவதற்காக ஏற்படுத்தப் பட்ட சங்கம்.

சமணத் துறவிகள் அந்தக் காலத்தில் பெருங்கூட்டமாக இருந்தனர். சமண முனிவர்களின் கூட்டத்திற்குச் சங்கம் என்பது பெயர். பெளத்த பிட்சுக்களின் கூட்டத்திற்கும் சங்கம் என்பது பெயர். சமண முனிவரின் சங்கங்கள் (கூட்டங்கள்) நான்கு பெரும் பிரிவுகளாகவும், பல உட்பிரிவுகளாகவும் அக்காலத்தில் பிரிக்கப்பட்டிருந்தன. நான்கு பெரும் பிரிவுகள் நந்தி கணம், சேன கணம், சிம்ம கணம், தேவ கணம் என்பன (கணம் - சங்கம்). இந்நான்கு கணங்களில் நந்தி கணம் பேர்போனது. திரமிள சங்கத்தை ஏற்படுத்திய வச்சிரநந்தியும் நந்தி கணத்தைச் சேர்ந்தவரே. நந்தி கணத்தில் சமண முனிவர் கூட்டம் அதிகமாகப் பெருகிவிட்டபடியினாலே, வச்சிரநந்தி ஆசாரியர், அந்தக் கணத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பிரிவுக்குப் பழைய நந்திச் சங்கம் என்றும், மற்றொரு பிரிவுக்குத் திரமிள் சங்கம் என்றும் பெயர் கொடுத்தார் என்பது சமண சமய வரலாறு. தமிழ் முனிவர்கள் அதிகமாக இருந்த படியினாலே திரமிள சங்கம் என்று பெயர் சூட்டினார்.

நந்தி சங்கத்தின் பிரிவுதான் திரமிள சங்கம் என்பதற்குக் கன்னட தேசத்தில் உள்ள ஒரு சாசனச் செய்யுள் சான்றாக இருக்கிறது. அச் செய்யுள் இது:

ஸ்ரீமத் திரமிள ஸங்கேஸ்மிம் நந்தி
ஸங்கேஸ்தி அருங்களா
அன்யோபாதிநிஸ்ஸேஷ ஸாஸ்த்ர
வராஹி பாரஹைஹி ||

இந்தச் சுலோகத்திலே நந்தி சங்கத்தோடு கூடிய திரமிள சங்கத்து அருங்கலான்வயம் என்னும் பிரிவு கூறப்படுதல் காண்க.

எனவே, சமண முனிவராகிய , வச்சிரநந்தி மதுரையில் திரமிள சங்கத்தை நிறுவினார் என்றால், சமண முனிவரின் திராவிட சங்கத்தை நிறுவினார் என்பது பொருளாகும். அதாவது மத சம்பந்தமாக சமண முனிவரின் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தினார் என்பது பொருள். வச்சிரநந்தி ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் தமிழ் மொழியை ஆராய்வதற்காக ஏற்பட்ட சங்கம் அன்று. சமண சமயத்தைப் பரப்புவதற்காக ஏற்படுத்தப் பட்ட சங்கம் ஆகும்.

இதை அறியாமல் வையாபுரிப் பிள்ளையவர்கள், வச்சிரநந்தியின் தமிழ்ச் சங்கமும் பாண்டியரின் தமிழ்ச் சங்கமும் ஒன்றே என்று கூறுகிறார். முதல் கோணல் முற்றுங் கோணல் என்பது பழமொழி. வச்சிரநந்தியின் சமண முனிவர் சங்கமும், பாண்டியரின் தமிழ் ஆராய்ச்சி சங்கமும் ஒன்றே என்று தவறான முடிவு கொண்ட பிள்ளையவர்கள், கி. பி. 470இல்தான் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டது என்றும் இந்தச் சங்கத்தில்தான் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறி மற்றும் பல தவறான முடிவுகளைக் கூறுகிறார்.

கடுந் துறவிகளாகிய சமண முனிவர்கள் - சிற்றின்பத்தையும், கொலைகளையும் கடுமையாக வெறுக்கிற சமண முனிவர்கள் - தமிழ்ச் சங்கம் வைத்துக்கொண்டு காதற்செய்திகளையும், போர்ச்செய்திகளையும் கூறுகிற அகநானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு முதலிய செய்யுள்களை ஆராய்ந்தனர், இயற்றினர் என்று கூறுவது எவ்வளவு அசம்பாவிதம்! முற்றத் துறந்த சமண முனிவர்கள் இசையையும் நாடகத்தையும் ஆராய்ந்தனர் என்று கூறுவது எவ்வளவு முரண்பட்ட செய்தி! சங்கம் என்னும் சொல்லை வைத்துக்கொண்டு அவற்றின் உண்மைப் பொருளை ஆராயாமல் வெவ்வேறு காலத்திலிருந்த வெவ்வேறு நோக்கமுடைய சங்கங்களை ஒன்றாக இணைத்து முடிபோடுவது என்ன ஆராய்ச்சியோ!

வச்சிரநந்தி மதுரையில் ஏற்படுத்திய திரமிள சங்கம் (சமண முனிவர் சங்கம்) மதுரையைச் சூழ்ந்துள்ள எட்டுக் குன்றங்களில் நிலைத்து, “எண்பெருங் குன்றத்து எண்ணாயிரம் சமணர்களாகப் பெருகியது. அந்தச் சமண சங்கம் பாண்டி நாட்டில் சமண சமயத்தைச் செழிக்கச் செய்தது. அதனால் பிற்காலத்திலே சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார் களும் தோன்றி, சமண சமயத்துடன் சமயப் போர் நிகழ்த்தினர். இச்செய்தியைப் பெரியபுராணம் முதலிய நூல்களில் காண்கிறோம். எனவே, வையாபுரிப் பிள்ளை கூறுகிறபடி, வச்சிரநந்தி உண்டாக்கிய திரமிள சங்கமும் பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கமும் ஒன்றல்ல, வெவ்வேறு சங்கங்கள் ஆகும். அவை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நோக்கத்துடன் வெவ்வேறு ஆட்களால் உண்டாக்கப்பட்டவை. இரண்டையும் ஒன்றாகப் பொருத்திக் கூறுவது தவறாகும்.

பாண்டியர் ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் கி. பி. 300க்குப் பிறகு இருந்திருக்க முடியாது. கி.பி. 300க்கு முன்புதான் பாண்டியரின் தமிழ்ச் சங்கங்கள் இருந்திருக்க வேண்டும். இதனைத் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றைக் கொண்டு அறியலாம். ஏறக்குறைய கி. பி. 300இல் களபரர் என்னும் அரசர் தமிழ் நாட்டிற்கு வந்து சேர, சோழ, பாண்டியர் ஆகிய தமிழ்நாடு முழுவதையும் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்தக் களபரர் தமிழகத்திற்கு அப்பாலிருந்து வந்தவர்கள். களபரர் தமிழகத்தைக் கைப்பற்றிய பிறகு சேர, சோழ, பாண்டிய மன்னர் களபரருக்குக் கீழ் அடங்கியிருந்தார்கள். களபரரின் ஆட்சி ஏறக்குறைய 300 ஆண்டுகள் தமிழகத்தில் இருந்தது. பிறகு ஏறக்குறையக் கி.பி. 600இல், கடுங்கோன் என்னும் பாண்டியன் களபரரை வென்று பாண்டிய நாட்டை மீட்டுக் கொண்டான். ஏறக்குறைய அதே காலத்தில், தொண்டை நாட்டிலிருந்த சிம்ம விஷ்ணு என்னும் பல்லவ அரசன் களபரரை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். அப்போது, களபரருக்குக்கீழ் அடங்கியிருந்த சோழர், பல்லவர்களுக்குக்கீழ் அடங்கவேண்டியதாயிற்று. ஏறக்குறைய அதே காலத்தில் சேர நாடும் களபரர் ஆட்சியிலிருந்து சுயேச்சை யடைந்தது. களபரர் ஆட்சிக் காலத்தில்தான் வச்சிரநந்தி கி.பி. 470இல் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார். களபரர்கள் சமண, பௌத்தச் சமயங்களை ஆதரித்தவர்கள். அவர்கள் தமிழ்மொழியை ஆதரித்ததாகத் தெரியவில்லை. கி. பி. 470இல் அரசாண்ட களபர அரசன் அச்சுத விக்கந்தன் என்பவன். எனவே, பாண்டியரின் தமிழ்ச் சங்கம் கி.பி. 300க்கும் 600க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டிருக்க முடியாது. கி.பி. 300க்கு முற்பட்ட காலத்திலேதான் ஏற்பட்டிருக்க முடியும். கி.பி. 600க்குப் பிறகு பாண்டியர் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தி யிருக்க முடியாது. ஏனென்றால் கி.பி. 630இல் வாழ்ந்திருந்த திருநாவுக்கரசு சுவாமிகள் தமது தேவாரப் பதிகத்திலே தமிழ்ச் சங்கம் நீண்ட காலத்துக்கு முன்பு இருந்ததாகக் கூறுகிறார். எனவே, கி. பி. 470இல் களபரர் ஆட்சிக் காலத்தில் வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம், தமிழ் ஆராய்ச்சிச் சங்கம் அன்று. அது சமண சமயம் பற்றிய சமண முனிவர்களின் சங்கமாகும். இந்த விதத்திலும் வையாபுரிப் பிள்ளையின் கருத்துத் தவறாகிறது.

இதுகாறும் ஆராய்ந்ததிலிருந்து தெரிகிறது என்ன வென்றால், வையாபுரிப் பிள்ளையவர்கள், பொருளைத் தவறாகக் கருதிக்கொண்டு பொருந்தாத காரணங்களைப் பொருத்திக் காட்டியிருக்கிறார் என்பதும், அவருடைய முடிபுகள் தவறானவை என்பதும் ஆகும். வச்சிரநந்தியின் திராவிட சங்கம் வேறு; பாண்டியரின் தமிழ்ச் சங்கம் வேறு என்பது இங்கு நன்கு விளக்கப்பட்டது. பாண்டியரின் சங்கம் கி. பி. 300க்கு முன்பு இருந்திருக்க வேண்டும் என்பதும் விளக்கப்பட்டது.

வையாபுரிப் பிள்ளை பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிக் கூறுகிற இன்னொரு செய்தியையும் ஆராய்வோம். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய காலத்துக்குப் பிறகுதான் மதுரையில் தமிழ்ச் சங்கம் ஒரு பாண்டியனால் நிறுவப்பட்டது என்று சின்னமனூர்ச் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது என்பதைப் பிள்ளை அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். (பக். 59) உண்மைதான். மேலே நாம் காட்டியுள்ள சின்னமனூர்ச் சாசனப் பகுதி, பிள்ளையவர்கள் சுட்டிக் காட்டியது போல, பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பிறகுதான் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டதாகக் கூறுகிறது. அச்சாசனப் பகுதிக்குக் கீழே நாம் காட்டியுள்ள பாண்டியனுடைய மற்றொரு செப்பேட்டுச் சாசனப் பகுதி அதற்கு மாறாகக் கூறுகிறது. தமிழ்ச் சங்கம் ஏற்பட்ட காலத்திற்குப் பிறகு பாண்டியன் நெடுஞ்செழியன் இருந்ததாக இச்சாசனம் கூறுகிறது. ஆகவே, பிள்ளையவர்கள் கூறுவதுபோல் நெடுஞ்செழியனுக்குப் பிறகுதான் பாண்டியரின் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டதென்பது தவறாகிறது. இதுபற்றி விளக்கமாக எழுதினால் இக்கட்டுரை பெருகி விரியும். ஆகையினாலே, இது பற்றித் தனியாக எழுதுவோம். ஒன்றை மட்டும் கூறுவோம். பாண்டியன் நெடுஞ்செழியன், கடைச்சங்க காலத்திலே, தமிழ்ச் சங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலே இருந்தவன் என்பது உறுதி. நெடுஞ்செழியன் காலத்துக்குப் பிறகுதான் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டது என்று கூறுவது தவறு என்பதைக் கூறிக்கொண்டு இதனை முடிக் கிறேன். பிள்ளையவர்களின் ஏனைய ஆராய்ச்சிகளைப் பற்றிப் பின்னர் எழுதுவோம்.

-

கலைக்கதிர் பொங்கல் மலர்), மலர் 11, இதழ் 6, ஜூன், 1959

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ