பரும் யானையொடு பாஞ்சால ராயனை வெங்களத் தட்ட வென்றி யிவையென நெய்த்தோர் பட்டிகை யாக வைத்துப் பத்தூர் கொள்கெனப் பட்டிகை கொடுத்து. என்பது பெருங்கதை (வத்தவ காண்டம். கொற்றங் கொண்டது. 10 - 13). நெய்த்தோர்ப் பட்டிகை என்பதற்குக் குறிப்புரை எழுதிய டாக்டர் சாமிநாத ஐயர் அவர்கள், நெய்த்தோர் - இரத்தம், பட்டிகை - பத்திரிகை' என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால், இத்தொடருக்கு விளக்கம் காண முடியவில்லை. இஃது ஐயரவர்களுடைய குறையன்று. இக்காலத்துப் புலவர்கள் வேறு யார் உரை எழுதினாலும் இவ்வளவுதான் எழுத முடியும். பண்டைக்காலத்து உரையா சிரியர்கள் இத்தொடருக்கு உரை எழுதியிருந்தால் தெளிவான விளக்கவுரை எழுதியிருப்பார்கள். பண்டையுரையாசிரியர் ஒருவரும் இதற்கு உரை எழுதவில்லை. 'நெய்த்தோர்ப் பட்டிகை' என்பது, பண்டைக்காலத்தில் வழக்காற்றில் இருந்து இக்காலத்தில் வழக்கற்றுப்போன ஒரு செய்தியெனத் தெரிகிறது. பண்டைக் காலத்துச் சாசனங்களின் உதவியினாலே, இச்சொற்றொடரின் உண்மைப் பொருள் அறியக்கிடக்கிறது. உதயணன், பாஞ்சால மன்னனை வென்று, அவ்வெற்றியின் மகிழ்ச்சியினாலே, பத்து ஊர்களை நெய்த்தோர்ப் பட்டிகை யாகக் கொடு...