Skip to main content

பல ரூபங்களில் காந்தி: செருப்புத் தைப்பவர் | அனு பந்தோபாத்யாயா


தனது 63வது வயதில் காந்திஜி வல்லபாய் பட்டேலுடன் எரவாடா சிறையில் இருந்தார். பட்டேலுக்கு ஒரு ஜோடி புதிய செருப்பு தேவைப்பட்டது. ஆனால், அத்தருணத்தில் சிறையில் செருப்பு தைப்பவர் யாரும் இல்லை. காந்திஜி சொன்னார்: ''எனக்கு நல்ல தோல் கிடைத்தால் நானே உங்களுக்கு செருப்பு தைத்துக் கொடுத்துவிடுவேன். வெகு காலத்திற்கு முன் கற்றுக்கொண்ட அத்தொழில் எனக்கு இன்னமும் நினைவு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நான் ஒரு நல்ல செருப்புத் தைப்பவனாக இருந்தேன். சோட்பூரில் உள்ள கதர் ஆசிரமத்தின் மியூசியத்தில் நான் தைத்த செருப்புகளைக் காணலாம். நான் அந்த ஜோடி செருப்புகளை யாருக்காகவோ அனுப்பினேன். அந்த நபர் தன்னால் அச்செருப்புகளை அணிய முடியாது என்றும், ஒரு அழகுப் பொருளாகத்தான் வைத்துக்கொள்ள முடியும் என்றும் சொல்லிவிட்டார். டால்ஸ்டாய் பண்ணையில் இருந்தபோது நான் நிறைய செருப்புகளைத் தைத்திருக்கிறேன்.''
1911ம் ஆண்டு தனது உறவினர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் ''நான் இச்சமயம் எல்லா நேரங்களிலும் செருப்பு தைப்பதில் ஈடுபட்டுள்ளேன். நான் இவ்வேலையை முக்கியமானது என்று கருதுகிறேன். மேலும் எனக்கு இந்த வேலை பிடித்திருக்கிறது. இதுவரை 15 ஜதை செருப்புகள் தயாரித்துவிட்டேன். உனக்கு புதிதாகச் செருப்புகள் தேவைப்பட்டால் செருப்பின் அளவுகளைக் குறிப்பிட்டு எனக்கு கடிதம் போடவும்'' என்று எழுதி உள்ளார்.
அவருடைய நெருங்கிய ஜெர்மானிய நண்பராகிய கல்லன் பாக்கிடமிருந்து காந்திஜி செருப்புத் தைக்கும் தொழிலைக் கற்றார். காந்திஜி நிறையப் பேர்களுக்கு செருப்பு தைப்பதைக் கற்றுக் கொடுத்தார். அவருடைய சீடர்களில் சிலர் குருவை மிஞ்சிய விதத்தில் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் தைத்த செருப்புகள் பண்ணைக்கு வெளியே விற்பனை செய்யப்பட்டன. இந்தச் செருப்புகள் சாண்டல் வகையைச் சேர்ந்தவை. இவற்றை நீண்ட கால் சட்டை (பாண்ட்) போட்டவர்களும் அணியலாம். நீண்ட கால் சட்டையுடன் பூட்சுகளுக்கு பதிலாக சாண்டல் அணியும் புதிய பாணி (பாஷன்) காந்திஜி காரணமாக தென் ஆப்பிரிக்காவில் உருவாகியது. சாண்டல்கள் காற்றோட்டமாக இருந்ததால் கோடை காலங்களில் பூட்ஸைக் காட்டிலும் சௌகரியமாக இருந்தன.
காந்திஜியிடம் ஆலோசனை கேட்பதற்காக ஒருதடவை சர்தார் பட்டேலும் ஜவஹர்லால் நேருவும் சேவாகிராமத்திற்கு வந்திருந்தனர். அப்போது காந்திஜி பயிற்சியாளர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். துண்டுகளை இப்படிப் பொருத்த வேண்டும்; தையல் இப்படிப் போடவேண்டும்; சில துண்டுகள் இப்படிக் குறுக்காக வைக்கப்படவேண்டும்; அடித்தோல் உடலின் முழு எடையையும் தாங்குவதால், சரியான முறையில் பொருத்தப்பட வேண்டும்என்றெல்லாம் காந்திஜி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அம்மாணவர்கள், தாங்கள் தைத்திருந்த செருப்புகளின் குறைகளை அகற்றிக்கொண்டிருந்தனர். தலைவர்கள் கோபத்துடன் "இந்த பொன்னான நேரத்தை இப்பயிற்சியாளர்கள் பாழடிக்கிறார்களே'' என்று அங்கலாய்த்தனர். காந்திஜியும் கோபத்துடன் "அவர்கள் பாடம் கற்றுக்கொள்வதைக் குறை கூறாதீர்கள்! வேண்டுமானால் நீங்களும் நல்ல ஜோடி செருப்பு எப்படி செய்யப்படவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளலாம்'' என்று கூறினார்.
வேறொரு சந்தர்ப்பத்தில் காந்திஜியும் அவரது சக ஊழியர்களும் இறந்துவிட்ட ஒரு காளை மாட்டின் உடல் கிராமத்தில் வசிக்கும் தோல் பதனிடும் தொழிலாளர்களால் எப்படி தோலுரிக்கப்படுகிறது என்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்தார்கள். பதனிடுபவர்கள் வெகு சீராக, தோலில் எவ்வித சேதாரமும் இன்றி மாட்டின் உடலைக் கீறி தோல் உரித்தனர். அவர்களது திறமையைக் கண்டு காந்திஜி வியந்தார். ஒரு தேர்ந்த அறுவைச் சிகிச்சை நிபுணரால்க்கூட இவ்வளவு சீராக இப்பணியைச் செய்ய இயலாது என்று காந்திஜியிடம் சிலர் கூறினர். காந்திஜியைப் பொருத்தவரை, மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவருமே தோல் பதனிடும் தொழிலாளர்கள்தான். ஒரு மருத்துவரின் பணி மரியாதைக்குரியதாகக் கருதப்படுகிறது. ஆனால், ஒரு தோல் பதனிடுபவரின் பணி அருவருக்கத்தக்கதாகக் கருதப்படுகிறது. தோல் பதனிடுபவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும் முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறார்கள்.
காந்திஜி செருப்புத் தைப்பதுடன் நிறுத்திவிடவில்லை. தோல் பதனிடும் தொழிலிலும் தேர்ச்சி பெற விரும்பினார். வேறு என்னதான் செய்வது? உலகம் முழுவதிலும் நிறைய மனிதர்கள் தோலினாலான செருப்புகளையும் பூட்சுகளையும் அணிகின்றனர்கள். இதற்காக நிறைய ஆடு, மாடுகள் கொல்லப்படுகின்றன. காந்திஜியோ அஹிம்சையில் நம்பிக்கை வைப்பவர். மிகவும் நோயுற்றிருந்த தன் மனைவிக்கு வைத்தியர்கள் புலால் உணவு அவசியம் என்று கூறியபோதும், நோயுற்றிருந்த மகன்களுக்கு முட்டை தரவேண்டும் என்பதையும் மறுத்த அம் மகான் செருப்பு தைப்பதற்காக ஆடு, மாடுகளைக் கொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வார்? ஆனாலும், அவருக்கு தோல் தேவைப்பட்டது.
இயற்கையாகவே மரணம் எய்திவிட்ட ஆடு, மாடுகளின் தோலை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் தீர்மானித்துவிட்டார். இப்படிப்பட்ட தோலிலிருந்து தைக்கப்பட்ட காலணிகள் 'அஹிம்சைக் காலணிகள்' என்று அழைக்கப்பட்டன. இறந்துவிட்ட பிராணிகளின் உடல்களைக் காட்டிலும் கொல்லப்பட்ட பிராணிகளின் உடலிலிருந்து தோலுரிப்பது எளிதாக இருந்தது. தோல் தொழிற்சாலைகள் அஹிம்சைத் தோலைத் தயாரிப்பது இல்லை. அதனால்தான், காந்திஜி தோல் பதனிடும் தொழிலைக் கற்பது அவசியம் ஆகிவிட்டது.
அந்தக் காலகட்டத்தில் ஆண்டுதோறும் ஒன்பது கோடி ரூபாய் பெறுமான பதனிடப்படாத தோல் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மேலை நாடுகளில் அத்தோல் சீரான முறையில் பதனிடப்பட்டு, பல தோல் பொருட்களாக மாற்றப்பட்டு, அதன் மதிப்பு பல கோடி ரூபாய்களாக உயர்த்தப்பட்டு, இந்தியாவில் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட நஷ்டம் பணத்தில் மட்டும் அல்ல. பல தோல் பதனிடுவோர் மற்றும் செருப்பு தைக்கும் தொழிலாளிகள் வேலைவாய்ப்புகளை இழந்துகொண்டிருந்தனர். நூல் நூற்போர் மற்றும் துணி நெய்வோர் போன்று தோல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களும் வேலை இல்லாத காரணத்தால் பட்டினியை எதிர்நோக்கும் அபாயம் ஏற்பட்டிருந்தது.
தோல் பதனிடும் தொழில் ஏன் வெறுக்கத்தக்கதாகக் கருதப்படுகிறது என்று காந்திஜி சிந்திப்பது உண்டு. பழங்காலத்தில் அப்படி இருந்திராது. ஆனால், இன்றோ லட்சக்கணக்கான மனிதர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தலைமுறை தலைமுறையாக தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுகின்றனர். மேல் ஜாதியினர் இவர்களை வெறுத்து ஒதுக்குகின்றனர். சமுதாயத்தில் இவர்களுக்குக் கல்வி அறிவோ, கலாச்சாரமோ, சுத்தம் சுகாதாரமோ மரியாதையோ எதுவுமே கிடையாது என்ற சூழ்நிலை நிலவுகிறது. தோல் பதனிடுபவர்களும், துப்புரவுத் தொழிலாளர்களும் செருப்புத் தைப்பவர்களும் சமுதாயத்திற்கு அவசியமான முக்கியப் பணிகளைச் செய்து வருகின்றனர்; இருப்பினும், சாதி வேறுபாடு காரணமாக இவர்களது வாழ்க்கை பரிதாபத்திற்குரியதாகிவிடுகிறது. பிற நாடுகளில் ஒரு மனிதன் தோல் பதனிடுவதின் காரணமாகவோ செருப்புத் தைப்பதின் காரணமாகவோ அவன் ஏழையாகவும் எழுத்தறிவில்லாதவனாகவும் தீண்டத் தகாதவனாகவும் ஆகிவிடுவதில்லை.
கிராமத் தொழில்களுக்குப் புனர்வாழ்வு கொடுப்பதற்காக காந்திஜி பொதுமக்களின் ஆதரவு வேண்டி பல வேண்டுகோள்கள் விடுத்தார். தோல் பதனிடும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களை கிராமத்தில் தோல் பதனிடுபவர்களுடன் இணைந்து அவர்களது பணியினை மேம்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டால் இறந்த மிருகங்களின் புலால் உண்ணப்படும் பழக்கத்தைத் தவிர்த்துவிடலாம் என்று காந்திஜி எண்ணினார். ஒரு இறந்த பசுமாடு தோல் பதனிடுபவரின் வீட்டிற்குக் கொண்டுவரப்படும்போது அவ்வீடு விழாக்கோலம் பூண்டுவிடுகிறது. அன்று, அந்த மாட்டின் புலாலிலிருந்து பெரும் விருந்து அவர்களுக்குக் கிடைக்கும். வீட்டின் சிறுவர்கள் மாட்டின் உடல் அறுக்கப்படும்போது அதைச் சுற்றி ஆடிப்பாடி மகிழ்வார்கள். எலும்பு மற்றும் சதைப்பிண்டங்களை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி சிரித்து மகிழ்வார்கள். அக்காட்சி, காந்திஜியை அருவருப்படைய வைத்தது.
ஹரிஜன தோல் பதனிடுபவர்களிடம் அவர் வேண்டுகோள் விடுப்பதுண்டு; “நீங்கள் இறந்த மாட்டின் புலாலை உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டுவிடுங்கள். நீங்கள் அப்பழக்கத்தைக் கைவிடாவிட்டாலும், நான் உங்களுடன் எப்படியும் தொடர்ந்து பழகுவேன்; ஆனால், ஜாதிக்கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட இந்துக்கள் இது ஒரு மோசமான பழக்கம் என்று உங்களை வெறுத்து ஒதுக்குவார்கள்.'' அவர்கள் கொடுத்த பதில் "நீங்கள் எங்களை இறந்த மாட்டின் தோலை உரிக்கச் சொன்னால் அதன் புலாலை உண்ணும் பழக்கத்தை எங்களால் தவிர்க்க இயலாது." "ஏன் அப்படி? நானும் ஒரு நாள் தோல் பதனிடும் தொழிலை மேற்கொள்வேன். ஆனால், இறந்த மாட்டின் புலாலை உண்ண மாட்டேன். என் அனுபவத்திலிருந்து என்னால் உறுதிப்படக் கூறமுடியும். துப்புரவுத் தொழிலையும் தோல் பதனிடும் தொழிலையும் சுத்தமான மற்றும் சுகாதாரமான முறையில் மேற்கொள்ள முடியும்" என்பதைக் கேட்டார் காந்திஜி.
சபர்மதி மற்றும் வார்தா ஆசிரமங்களில் தோல் பதனிடும் மையங்கள் காந்திஜியால் துவங்கப்பட்டன. முதலில் சிறிய அளவில் துவங்கப்பட்டது. பிறகு, பதனிடப்பட்ட தோல்களை வைப்பதற்காக, பக்காவான கட்டிடங்கள் எழும்பின. அந்தக் காலத்திலேயே இக்கட்டிடங்களுக்காக காந்திஜி ரூ.50,000/- நிதி திரட்டினார். ஆசிரமத்தில் சில பயிற்சியாளர்களுக்கு அனுபவம் மிக்க தோல் பதனிடும் தொழிலாளிகளின் உதவியுடன் அத்தொழிலில் பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு தயாரிக்கப்பட்ட தோல் பொருட்கள் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டன. பணி முழுவதுமே இறந்த பிராணிகளின் உடல்களைக் கொண்டு செய்யப்பட்டன.
காந்திஜி, கல்கத்தாவில் அமைந்திருந்த தேசீய தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு விஜயம் செய்து, அங்கு குரோம் தோல் தயாரிக்கப்படும் முறைகளை உன்னிப்பாகப் பார்த்தார். உப்பு தடவப்பட்ட மாட்டுத் தோல்கள் சுண்ணாம்பு நீரில் ஊற வைக்கப்பட்டு எப்படி முடிகள் அகற்றப்படுகின்றன என்பதையும், அதன் பின்பு சாயம் எப்படி ஏற்றப்படுகிறது என்பதையும் காந்திஜி கண்டறிந்துகொண்டார். தாகூரின் நிறுவனமாகிய சாந்தினிகேதனிலும் தோல் பதனிடும் தொழில் துறையில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் பற்றி காந்திஜி அறிந்துகொண்டார். அதேசமயம் காந்திஜி கிராமங்களில் பழக்கத்திலிருந்த தோல் பதனிடும் முறைகளைக் கைவிட்டுவிட விரும்பவில்லை. அப்படிச் செய்தால் கிராமத்தில், அப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வேலை இல்லாமல் போய், அவர்கள் தோல் தொழில்களுக்காக நகரங்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும் அல்லவா? இறந்து போன மாட்டின் உடலை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்வதற்கான வழிமுறை ஒன்றை காந்திஜி தேடிக்கொண்டிருந்தார். கிராமத்துத் தோல் பதனிடுவோர், மாட்டின் உடலைச் சமயத்தில் கால்களைப் பிடித்துத் தூக்கி, சமயத்தில் தரதரவென்று இழுத்து தோலைப் பாழடித்து அதன் மதிப்பைக் குறைத்துவிடுகிறார்கள். அம்மாட்டின் எலும்புகளைச் சரியான முறையில் பயன்படுத்தும் திறனும் அவர்களுக்குக் கிடையாது. எலும்புகளை நாய்களுக்கு உணவாகப் போட்டுவிடுகிறார்கள். இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. எலும்புகளிலிருந்து தயாரிக்கப்பட்ட கைப்பிடிகளும் பொத்தான்களும் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. தூளாக்கப்பட்ட எலும்பு நல்ல உரமாகும்.
காந்திஜி தோல் தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் நெருங்கிப் பழகினார். அவர்களும் அவரைத் தங்களது வழிகாட்டியாகவும் தங்களது வாழ்வை மேம்படுத்த வந்த மகானாகவும் ஏற்றுக்கொண்டார்கள். அவர்களது குடியிருப்புகளுக்கு அவர் விஜயம் செய்தபோது காந்திஜியிடம் குடிநீர்த் தட்டுப்பாடு பற்றி புகார் கொடுத்தார்கள். ஊர்ப் பொதுக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதையும், கோவில்களில் அவர்கள் நுழைய முடியாது என்பதையும், ஊர்மக்கள் அவர்களுடன் பழகுவதைத் தவிர்க்கிறார்கள் என்பதையும் அதன் காரணமாகவே அவர்கள் ஊரிலிருந்து ஒதுக்குப்புறமான பகுதிகளில் வசிக்க வேண்டியுள்ளது என்பதையும் எடுத்துக் கூறினார்கள். காந்திஜிக்கு வெட்கமும் வேதனையும் ஏற்பட்டது. அவர்களுக்குப் பிச்சை போட காந்திஜி விரும்பவில்லை. தங்கள் கால்களிலேயே அவர்கள் நிற்கவேண்டும் என்றுதான் அவர் விரும்பினார். தாகூருடன் இணைந்து காந்திஜி வெளியிட்ட கருத்து இது. "உடல் உழைப்பு கேவலம் என்று கருதப்படும் பழக்கம் தோன்றிய நாளிலிருந்து இந்தியாவைப் பீடை பிடித்துவிட்டது. தங்களது உடன்பிறப்புகளுக்கு மனித உரிமைகளை மறுத்ததற்காகவும் அநியாயமாகவும் அநீதியுடனும் நடந்துகொண்டதற்காகவும் மேல் ஜாதியினர் பதில் சொல்லவேண்டிய நாள் வரத்தான் போகிறது."
தோல் பதனிடுவோருக்கு நியாயமான கூலியும் அவர்களது குழந்தைகளுக்குப் படிப்பறிவும் மருத்துவ உதவியும் கிடைப்பதற்காகப் பணி மேற்கொள்ளக் கூடிய சில நல்ல தொண்டர்களைக் காந்திஜி தேடிக்கொண்டிருந்தார். அக்குழந்தைகளுக்காக இரவுப் பள்ளிகள் நடத்தப்பட்டன. குழந்தைகள் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றார்கள். காந்திஜி தாமே தோல் தொழிலாளர்களுக்காக சில இரவுப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார்.
தோல் தொழிலாளர்களும் காந்திஜியின் வேண்டுகோளுக்கு இணங்க முன்வந்தனர். ஒரு சிலர் இறந்துபோன மாடுகளின் தோல்களை மட்டும் பதனிட ஒப்புக்கொண்டனர். வேறு சிலர் இறந்துபோன மாட்டின் புலாலை உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டுவிடுவதாக வாக்களித்தனர். ஒரு தடவை, அவர் தோல் தொழிலாளர்களின் கூட்டம் ஒன்றிற்குப் பிய்ந்துபோன செருப்புகளை அணிந்த வண்ணம் கலந்துகொண்டார். அப்போது, அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததால் அவரிடம் மாற்று ஜோடி செருப்புகள் இல்லை. அதைக் கண்ட தோல் தொழிலாளிகளில் இருவர் உடனடியாக அவருக்குப் புதிய ஜோடி செருப்புகளைத் தைத்து அன்பளிப்பாக வழங்கினர்.
காந்திஜி தனது தென் ஆப்பிரிக்க சிறைவாசத்தின் போது தமது கைகளினால் தைத்த ஒரு ஜோடி செருப்புகளை அச்சமயம் அந்நாட்டின் அதிபராக விளங்கிய ஜெனரல் ஸ்மட்ஸ் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். காந்திஜியின் 70வது பிறந்த தினத்தன்று ஜெனரல் ஸ்மட்ஸ் அவருக்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில், "சிறையில் நீங்கள் எனக்காக ஒரு ஜோடி செருப்புகளைத் தயாரித்து அளித்தீர்கள். அவற்றை நான் பல தடவைகள் அணிந்ததுண்டு; இருப்பினும் உங்களைப் போன்ற ஒரு மகாத்மா தயாரித்த அச்செருப்புகளை அணிய நான் தகுதி அற்றவன் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டுவிட்டது".
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...