குமிழி கிளம்பும்படி நன்றாகக் காய்ச்சப்பட்ட நெய்யில் கையை விட்டால் எப்படியிருக்கும்? இது என்ன முட்டாள்தனமான கேள்வி என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இப்படிச் செய்வது பண்டைக்கால வழக்கம். பண்டைக் காலத்தில் நமது நாட்டில், காய்ச்சின நெய்க் குடத்தில் கையை விடுவது ஒரு முறையாக (சத்திய சோதனையாக) நடைபெற்றுவந்தது. ஆங்கில அரசாட்சிக்குப் பிறகு அவ்வழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. உடன்கட்டை ஏறுதல், நரபலி கொடுத்தல் முதலிய கொடிய வழக்கங்களை ஆங்கில அரசாங்கத்தார் தடுத்துவிட்டது போலவே, நெய், எண்ணெய் இவற்றைக் கொதிக்கவைத்து அதில் கையை இடச் செய்வதையும் அரசாங்கத்தார் தடுத்துவிட்டார்கள். ஒருவன் ஒரு வழக்குத் தொடர்கிறான். அந்த வழக்கில் வாதியாவது, பிரதிவாதியாவது சொல்வது உண்மை , சத்தியம் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? அதற்கு ஒரு முறையைப் பண்டைக் காலத்தில் வழங்கி வந்தார்கள். அது என்னவென்றால், ஒரு குடத்தில் நெய் அல்லது எண்ணெயை விட்டு அதை நன்றாகக் கொதிக்கும்படி காய்ச்சி அது கொதித்துக் கொண்டிருக்கும் போதே, வழக்கில் சம்பந்தப்பட்ட வாதியை அல்லது பிரதிவாதியை அதில் கை விடச் செய்வதுதான். அவன் சொல்வது சத்தியமாக இருந்தால...